பொய் வழக்கில் கைது: ரூ.10 லட்சம் இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை பொய் வழக்கில் கைது செய்த விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பாதிக்கப்பட்ட நபருக்கு சம்பந்தப்பட்ட 3 போலீசார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மேலவாசலில் 2021 ஜூன் 26 ல் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக விக்னேஷ் உள்ளிட்ட சிலர் மீது திடீர்நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். 24 கிலோ கஞ்சா இருந்ததாகக்கூறி பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விக்னேஷிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.ஒரு லட்சம் அபராதம் விதித்து 2023 ல் அந்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் மேல்முறையீடு செய்தார். நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜி.கருப்பசாமி பாண்டியன்: வழக்கில் தொடர்புடைய மற்றொரு எதிரியின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர, மனுதாரர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. சம்பவ இடத்தில் மனுதாரர் இருந்தார் என்பது சந்தேகத்திற்குரியது என்றார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியது மட்டுமல்லாமல், தவறான ஆதாரங்களை முன்வைத்து தண்டனை பெற சூழ்ச்சி செய்துள்ளது. மனுதாரர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை இந்நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. சம்பந்தப்பட்ட போலீசார் சதி செய்து கீழமை நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்து, மனுதாரர் தண்டனை பெற வழிவகுத்துள்ளனர். அதை இந்நீதிமன்றம் தீவிரமாகக் கருதுகிறது. கைது செய்த நாளிலிருந்து ஜாமினில் வெளியே வர முடியாமல் மனுதாரர் காவலில் உள்ளார். சம்பந்தப்பட்ட 3 போலீசார் கூட்டாக ரூ.10 லட்சம் இழப்பீடு தொகையை மனுதாரருக்கு வழங்க வேண்டும். அப்போலீசார் விளக்கமளிக்க வாய்ப்பளித்து விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.