வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
கள்ளிக்குடி; கள்ளிக்குடி ஒன்றியம் நேசநேரி கண்மாய் கருவேல மரங்களை ஏலம் விட்டுள்ளதாகக் கூறி ஒருவர் மரங்களை வெட்ட முயன்றார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது ரூ. 5 லட்சம் செலுத்தி ஏலம் எடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து நேசநேரி, சுப்புலாபுரம் பகுதியினர் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'இதுவரை ஏலம் விடப்படவில்லை. பத்திரிகைகளில் உரிய அறிவிப்புகள் வெளியிட்ட பின்பு ஏலம் விடப்படும்' என்றனர். கிராம மக்கள் கூறும்போது, 'கண்மாயில் மான், காட்டுப்பன்றி உள்பட வனவிலங்குகள் உள்ள நிலையில் கருவேல மரங்களை ஏலம் விடுவதால், வனவிலங்குகள் வாழ்வதற்கு இட வசதி இன்றி அழியும் சூழ்நிலையில் உள்ளது. எனவே மரங்களை வெட்ட ஏலம் விடக்கூடாது' என தெரிவித்தனர்.