| ADDED : ஜூன் 08, 2024 06:25 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனை வார்டுகளில் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்புகளை மாற்றாமல் அதிலேயே படுக்கச் சொல்வதால் நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.இங்கு தினமும் 7 ஆயிரம் புறநோயாளிகள், 3 ஆயிரத்து 250 உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். புதிதாக கட்டப்பட்ட டவர் பிளாக் வளாகத்தையும் சேர்த்தால் உள் நோயாளிகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டும். புதிய கட்டடங்கள், நவீன அறுவை சிகிச்சை கருவிகள், படுக்கைகள் வந்து விட்டன. ஆனால் படுக்கை விரிப்பை மாற்றும் பழக்கம் மட்டும் மருத்துவமனையில் இல்லை.நோயாளிகள் கூறியதாவது: வசதியில்லாததால்தான் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வருகிறோம். முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை இருந்தால்தான் அறுவை சிகிச்சைக்கே அனுமதிக்கின்றனர். அறுவை சிகிச்சை அரங்குகளை சுத்தமாக பராமரிக்கின்றனர். அறுவை சிகிச்சை முடிந்து வார்டுக்கு மாற்றும் போது அங்கு போதிய பராமரிப்பு இல்லை. வார்டில் ஏற்கனவே நோயாளி படுத்திருந்த அதே படுக்கை விரிப்பை சுத்தம் செய்யாமல் அதிலேயே படுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். படுக்கை விரிப்பில் ரத்தக்கறை இருக்கிறது என சுட்டிக்காட்டினாலும் மாற்றுவதில்லை.அறுவை சிகிச்சை செய்து உடல் நலிந்த நிலையில் இருக்கிறோம். மற்றவரின் ரத்தக்கறை படிந்த விரிப்பில் படுத்தால் கிருமித்தொற்று வருமோ என பயமாக உள்ளது. வேறு வழியின்றி புதிதாக போர்வை வாங்கி விரித்து பயன்படுத்துகிறோம். விரிப்பு மட்டுமின்றி, ஸ்டிரெச்சர், வீல்சேரில் ரத்தக்கறை இருந்தாலும் அதை உடனுக்குடன் கழுவுவதில்லை. அதை கூறினால், மணிக்கணக்கில் காக்க வைத்து அலைக்கழிக்கின்றனர். இன்சூரன்ஸ் கட்டணம் வசூலிப்பதால் தனியார் மருத்துவமனைகளைப் போல இங்கும் தினமும் படுக்கை விரிப்பை மாற்ற வேண்டும் என்றனர்.டீன் தர்மராஜ் கூறியதாவது: சுகாதாரச் செயலர், மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவுப்படி வார்டு நோயாளிகளின் படுக்கை விரிப்பை தினமும் மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். படுக்கை விரிப்பை மாற்றுவதை கண்காணிக்க 2 வார்டுகளுக்கு ஒரு 'மேட்ரன்' உள்ளார். படுக்கை விரிப்பை மாற்றவில்லை என்றால் உடனே தெரிவிக்கலாம். ஸ்டிரெச்சரில் இரண்டு பேரை ஏற்றிச் செல்வதால்தான் அவை சேதமடைகின்றன. எனவே, ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனி ஸ்டிரெச்சரில் கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.