சிவில் பாதுகாப்பு தன்னார்வலர் பணிக்கு பதிவு செய்ய அழைப்பு
மதுரை : மத்திய இளைஞர்நலம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'மை பாரத்' அமைப்பு மூலம் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இளைஞர் நலம், விளையாட்டு அமைச்சகத்தின் 'மை பாரத்' அமைப்பு, இளைஞர்களை, சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக இணைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. அவசர நேரங்களில் தேசிய நோக்குடன் முக்கிய பங்கு வகிக்க இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒருங்கிணைந்த முயற்சி இது. இயற்கை பேரழிவு, விபத்துகள், பொது அவசர நிலைகள், பிற எதிர்பாராத சூழல்களில் சிவில் நிர்வாகத்தை பூர்த்தி செய்ய நன்கு பயிற்சி பெற்ற, பொறுப்பு மிகுந்த தன்னார்வப்படையை உருவாக்குவதே இதன் நோக்கம்.இந்த தன்னார்வலர்கள் பரந்த சேவை மூலம் உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆதரவாக முக்கிய பங்கு வகிப்பர். மீட்பு, வெளியேற்ற நடவடிக்கைகள், முதலுதவி, அவசர சிகிச்சை, போக்குவரத்து மேலாண்மை, கூட்டங்களைக் கட்டுப்படுத்துதல், பொது பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, மறுவாழ்வு முயற்சிகளில் உதவுதல் ஆகிய பணிகள் இதில் அடங்கும். 'மை பாரத்' சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்களாக https://mybharat.gov.inஎனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, மை பாரத் மாநில இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விவரங்களுக்கு: 94456 62559.