உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள்ளே உள்ளே கார்கள்; இடமின்றி வெளியே காத்திருக்கும் கர்ப்பிணிகளின் உறவினர்கள்

மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டுக்குள்ளே உள்ளே கார்கள்; இடமின்றி வெளியே காத்திருக்கும் கர்ப்பிணிகளின் உறவினர்கள்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு சுற்றுச்சுவருக்குள் கார்கள் நிறுத்தப்பட்டிருக்க, கர்ப்பிணிகளின் உறவினர்கள் உட்கார இடமின்றி வார்டுக்கு வெளியே பரிதவிக்கின்றனர்.ஏற்கனவே இருந்த மகப்பேறு வார்டில் இடநெருக்கடி என்பதால் அருகிலேயே ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு வளாகம் ரூ.50 கோடியில் கட்டப்பட்டது. கட்டுமானம் துவங்கும் முன்பாகவே வாகன நிறுத்துமிடம், கர்ப்பிணிகளின் உறவினர்கள் அமர்வதற்கான காத்திருப்பு அறை அமைக்க வேண்டும் என மகப்பேறு டாக்டர்கள் தெரிவித்தனர். வாகன நிறுத்துமிடம், காத்திருப்போர் அறையும் கட்டாமல் திட்டமிடல் இன்றி அவசரகதியில் 6 மாடி கட்டடம் கட்டப்பட்டு செயல்படுகிறது.கர்ப்பிணிகளை அழைத்து வரும் உறவினர்களில் ஒருவருக்கு மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதி உண்டு. ஆனால் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, எந்த நேரமும் பிரசவமாகலாம் என்ற நிலையில் வார்டில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுடன் கூடுதலாக ஆண், பெண் உறவினர்கள் வருவதுண்டு. குழந்தை பிறந்த பின் உணவு, பிற தேவைகளுக்கு வெளியில் இருந்து அவர்கள் உதவ வேண்டும்.தினமும் 200 பேர் மகப்பேறு வார்டுக்கு வருகின்றனர். அவர்களின் உறவினர்கள் வார்டுக்கு வெளியே நிறுத்தப்படுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் வரும் போது கூட இந்த நெருக்கடியை கடந்து தான் உள்ளே செல்ல வேண்டியுள்ளது. சுற்றுச்சுவருக்குள்ளேயே போதுமான இடவசதி இருந்தும் கார்கள் நிறுத்துமிடமாக மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்துகிறது. ஏற்கனவே மருத்துவமனையில் நடப்பதற்கு கூட இடமில்லாத அளவு கார்கள் ஆக்கிரமித்துள்ளன. இந்த இடத்தில் தற்காலிக கூரையுடன் இருக்கைகள் அமைத்தால் உறவினர்கள் உள்ளேயே உட்கார முடியும். மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் மீது அக்கறை செலுத்தி மனது வைக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு கொசுக்கடி இலவசம்

//மருத்துவமனையில் ஆங்காங்கே திறந்தவெளியில் மழைநீர் தேங்கியிருப்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.சுத்தமான நீர், மழைநீரில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு வேகமாக இனப்பெருக்கம் செய்யும். டீன் அலுவலகம் செல்லும் வழியில் ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீருடன் மழைநீரும் தேங்கி நிற்கிறது. அருகில் கம்பிகளால் மூடப்பட்ட மழைநீர் கால்வாய்க்குள் தண்ணீர், குப்பை தேங்கி கிடக்கிறது. அலுவலகம் முன்புறமுள்ள கட்டடத்தின் மாடியில் இருந்து மழைநீர் கசிந்து கட்டடத்தில் படிந்து பாசி படர்ந்துள்ளது. இப்பகுதிகளில் டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.பத்து நாட்களுக்கு முன் பொது மருத்துவ புறநோயாளிகள் வார்டின் கான்கிரீட் மேற்பூச்சு இடிந்து விழுந்தது. அந்தநேரம் நோயாளிகளோ பணியாளர்களோ இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுபோன்று நிறைய இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தண்ணீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் வசதி செய்ய வேண்டும். நீர்க்கசிவு பகுதியை உடனடியாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை