உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கில் கைதான உதவி ஜெயிலர் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்கு

போக்சோ வழக்கில் கைதான உதவி ஜெயிலர் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் மீது வழக்கு

மதுரை : மதுரையில் போக்சோ வழக்கில் கைதான மதுரை உதவி ஜெயிலர் பாலகுருசாமி 51, கொடுத்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி. ஆரப்பாளையம் பகுதியில் முன்னாள் கைதியின் டிபன் சென்டருக்கு அடிக்கடி சென்று அவரது 3வது மகளிடம் 'பழக' விரும்பினார். ஆனால் அப்பெண் சம்மதிக்கவில்லை. இதனால் அப்பெண்ணின் சகோதரி மகளான 14 வயது மாணவியிடம் பாலகுருசாமி தனது அலைபேசி எண்ணை கொடுத்துள்ளார். டிச.,21ல் என்ன நோக்கத்திற்காக அலைபேசி எண்ணை கொடுத்தார் என்பதை அறிய அவரை தொடர்புகொண்டு வரவழைத்தனர். அங்கு பொதுமக்கள் முன்னிலையில் பாலகுருசாமியை அப்பெண் தாக்கினார். பெண் புகாரில் 'போக்சோ' வழக்கில் பாலகுருசாமி கைது செய்யப்பட்டார். பணியில் இருந்தும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இந்நிலையில் பாலகுருசாமி புகாரில் அப்பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகாரில் கூறியுள்ளதாவது:முன்னாள் கைதியின் மகள் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாராகி வந்தார். உயரம் சற்று குறைவாக இருப்பதால் அவருக்கு சில அறிவுரைகளை வழங்குமாறு முன்னாள் கைதி கேட்டு கொண்டதன்பேரில் சொன்னேன். டிச.,18 ல் முன்னாள் கைதியின் பேத்தி எனக்கு போன் செய்து 'தனக்கு பிரச்னை. சந்திக்க வேண்டும்' எனச் சொன்னார். 'உன் தாத்தாவிடம் சொல்' எனச்சொன்னேன். மீண்டும் டிச.,21ல் போன் செய்து 'சந்திக்க வேண்டும். தாத்தா பாட்டியிடம் சொல்ல முடியவில்லை' எனக்கூறினார். 'ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வரும்போது சந்திக்கிறேன்' எனச் சொன்னேன்.பிறகு ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தபோது அங்கு பேத்தி இருந்தார். அதேசமயம் ஆட்டோவில் ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதுகுறித்து கேட்டபோது முன்னாள் கைதி, அவரது மகள் உள்ளிட்ட சிலர் மிரட்டி தகராறு செய்தனர். 'வீடியோ எடுத்து மிரட்ட பார்க்கிறீர்களா' என நான் கேட்டதற்கு, அப்பெண் என் சட்டையை பிடித்து எட்டி உதைத்து பொய்யான காரணங்களை கூறி மிரட்டினார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் மிரட்டல், காயப்படுத்துதல், இழிவுப்படுத்தும் நோக்கில் தாக்குதல் ஆகிய பிரிவுகளின்கீழ் அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ