இலங்கைக்கு கடத்த யூரியா பதுக்கல் சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு
மதுரை துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிட்கோ வளாக கோடவுனில் அனுமதியின்றி மானிய விலை யூரியா பதுக்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரியதில், அரசு தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.கோவில்பட்டி சரவணன் தாக்கல் செய்த பொதுநல மனு: விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மத்திய அரசின் மானிய விலையில் உரம் வினியோகிக்கப்படுகிறது. கோவில்பட்டி அருகே திட்டங்குளம் சிட்கோ வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு கோடவுனில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மானிய விலை யூரியா 600 மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜன.,20ல் வழக்கு பதிந்தனர். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் வேளாண்துறையின் சில அலுவலர்களின் உதவி இல்லாமல் உர மூடைகளை வெளியில் பெறுவது சாத்தியமில்லை. விதிகள்படி மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்து, கூட்டுறவு சங்கங்களுக்கு உர மூடைகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தில் யூரியா மூடை ரூ.285 க்கு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இது இலங்கையில் ரூ.11 ஆயிரத்து 500 முதல் ரூ.18 ஆயிரத்து 500க்கு விற்பனையாகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக யூரியாவை இலங்கைக்கு கடத்துகின்றனர். போலீசார் பெயரளவிற்கு வழக்கு பதிந்துள்ளனர். இரு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதால் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி தமிழக உள்துறை கூடுதல் செயலர், துாத்துக்குடி எஸ்.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு வழக்கறிஞர்: அதிகாரிகளிடம் விபரம் பெற்று தெரிவிக்க அவகாசம் தேவை. இவ்வாறு தெரிவித்தார்.அவகாசம் அளித்த நீதிபதிகள் ஏப்.,9க்கு ஒத்திவைத்தனர்.