த.வெ.க., நிர்வாகி ஜாமின் மனு சி.பி.ஐ.,யை சேர்க்க உத்தரவு
மதுரை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் த.வெ.க., நிர்வாகி ஜாமின் கோரியதில் சி.பி.ஐ.,யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 ல் த.வெ.க.,பிரசார கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசியபோது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட சிலர்மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் தங்கியிருந்தபோது அவரையும், அவருக்கு உதவியதாக த.வெ.க.,நிர்வாகி பவுன்ராஜையும் செப்.29 ல் போலீசார் கைது செய்தனர். பவுன்ராஜின் ஜாமின் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுபாஷ்பாபு ஆஜரானார். அரசு வழக்கறிஞர் அந்தோணி சகாய பிரபாகர்,'இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,' என்றார். நீதிபதி, 'சி.பி.ஐ., தரப்பை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்,'என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.