மேலும் செய்திகள்
கொப்பரை விலை உயர்வால் இருப்பு வைப்பது அதிகரிப்பு
21-Sep-2024
மதுரை : மதுரையில் முதன்முறையாக வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ரூ.140க்கும், மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தேங்காய் கிலோ ரூ.55க்கும் விற்பனையானது.மத்திய அரசின் குறைந்தபட்ச விலை ஆதரவு திட்டத்தின் கீழ் தரமான பூஞ்சை தாக்காத தேங்காய் கொப்பரைக்கு கிலோவுக்கு ரூ.111.60 வீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வரத்து குறைவால் முதன்முறையாக வியாபாரிகள் ரூ.140க்கு வாங்கி சென்றதாக மதுரை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மதுரை விற்பனைக்குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 2020 முதல் தேங்காய் கொப்பரை மற்றும் மட்டை தேங்காய் ஏலமுறையில் விற்கப்படுகிறது. கடந்த இரண்டாண்டுகளாக வடஇந்தியாவில் தேங்காய்க்கான வரவேற்பு குறைந்ததால் தென்னை விவசாயிகள் பெரியளவில் லாபம் பெறவில்லை. தற்போது புரட்டாசி என்பதாலும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி விலை சற்று உயர்ந்தது. ஆந்திராவில் வெள்ளம் என்பதால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்தது.தரமான கொப்பரைக்கு மத்திய அரசு அதிகபட்சமாக ரூ.111.60 தான் நிர்ணயித்துள்ளது. வாடிப்பட்டி விற்பனை கூடத்தில் முதன்முறையாக கொப்பரைக்கு ரூ.140 கொடுத்து வியாபாரிகள் வாங்கினர். 26 விவசாயிகளின் 2713 கிலோ கொப்பரை ரூ.3.35 லட்சத்துக்கு விற்பனையானது. இதுவரை மட்டை தேங்காய் விலை கிலோ ரூ.14.20க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று கிலோ ரூ.28.05க்கு விற்கப்பட்டது. 9 விவசாயிகளின் 24ஆயிரத்து 100 காய்கள் ரூ.4.50 லட்சத்துக்கு விற்பனையானது என்றார்.மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறுகையில், பொள்ளாச்சி, கம்பம், போடி, சின்னமனுார், தேவாரம், பெரியகுளம் பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து குறைந்துள்ளது. ஆந்திராவில் கோயில்கள் மற்றும் ஓட்டல்களுக்கும் எண்ணெய் தயாரிப்புக்கும் இங்கிருந்து தேங்காய் அனுப்பப்படுவதால் விலை அதிகரித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.28 - ரூ.30 ஆக இருந்த தேங்காய் நேற்று ரூ.55க்கு விற்கப்பட்டது. அடுத்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு கிலோ ரூ.70 வரை உயரும் வாய்ப்புள்ளது. அதேபோல எலுமிச்சை விலையும் இருமடங்காகி சாதாரண தரத்தில் உள்ள காய்கள் கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டது என்றார்.
21-Sep-2024