வேலைக்கு எடு, கசக்கிப்பிழி, துாக்கி எறி பெரும் நிறுவனங்களின் மனப்பான்மை சி.ஓ.ஐ.டி.யூ., ஆதங்கம்
மதுரை: 'வேலைக்கு எடு, கசக்கிப்பிழி, துாக்கி எறி' என பெரும் நிறுவனங்கள் ஊழியர்களை நடத்துவதாக சி.ஓ.ஐ.டி.யு., கூட்டத்தில் அகில இந்தியத் தலைவர் ஆனந்தன் பேசினார்.மதுரையில் சென்ட்ரல் ஆர்கனைசேஷன் ஆப் இந்தியன் டிரேடிங் யூனியன்ஸ் அமைப்பின் மாநிலக் கூட்டம் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நிகழ்வில் சி.ஓ.ஐ.டி.யு., ஆனந்தன் பேசியதாவது:அரசு தொழிலாளர் விரோத அமைப்பாக செயல்படுகிறது. ஊதியம் குறைப்பு, சமூக, தொழில் பாதுகாப்பு, உடல்நலம், பணி நிலைமைகள் என சுருக்கியதன் விளைவாக நிறைய சட்டங்கள் இல்லாமல் போய்விட்டன. பா.ஜ., அரசை குறை கூறும் தமிழக அரசு, இந்த சட்டத் தொகுப்பை ஆதரிக்கும் விதமாக நடப்பதில் இருந்து பின்வாங்க வேண்டும்.தற்போது தொழிற்சங்கங்கள் நிறைய இல்லை. நம் நாட்டில் மனித வளம் அதிகம் என்பதால் ஊழியர்களும் வேறு வழியின்றி வேலை செய்கின்றனர்.11 மாதம் தற்காலிக வேலையில் அமர்த்துகின்றனர். 300க்கும் கீழ் உள்ள நிறுவனங்களில் சங்கங்கள் அமைக்க கூடாது என கூறுவதால் அவர்கள் நிந்திக்க படுகின்றனர். எங்கு சங்கங்கள் வேண்டுமோ அங்கே அமைக்க இப்புதிய தொகுப்பில் வழி வகை இல்லை.வேலை நிரந்தரம் இல்லை. இந்தியாவில் விவசாயம் மூலம் 40 சதவீதத்திற்கும் கீழ் ஜி.டி.பி., உள்ளது. ஆனால் தொழிற்சாலைகள் மூலம் அதிக ஜி.டி.பி., கிடைக்கிறது. ஆனால் எங்களை அவமதிப்பதாக இருக்கிறது இந்த சட்டத் தொகுப்பு. சுருக்கமாக சொல்வதென்றால் வேலைக்கு எடு, கசக்கிப்பிழி, துாக்கி எறி என பெரும் நிறுவனங்கள் ஊழியர்களை நடத்துகின்றன என்றார். சி.ஓ.ஐ.டி.யு., அகில இந்திய செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் விபின் மஹதோ உள்பட பலர் பங்கேற்றனர்.