உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயிர்களில் உயிரியல்  கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்துங்க ரசாயன உரங்களை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

பயிர்களில் உயிரியல்  கட்டுப்பாட்டு காரணிகளை பயன்படுத்துங்க ரசாயன உரங்களை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

மதுரை: தோட்டக்கலை பயிர்களில் ரசாயன உரங்களுக்கு பதில் உயிரி உரங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு கலெக்டர் பிரவீன் குமார் வேண்டுகோள் விடுத்தார். அவர் தெரிவித்ததாவது: தோட்டக்கலை பயிர்களான பழங்கள், காய்கறிகள், பூக்கள் சாகுபடியில் ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், உணவுப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்து, உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. விவசாயத்திற்கு பயன்படுத்தும் ரசாயன வேதிப் பொருட்களால் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது. இதனை கட்டுப்படுத்த, பயிரிடும் நிலங்கள், பயிர்களில் ரசாயன உபயோகத்தை குறைத்து, ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் மேலாண்மை நடைமுறையை பின்பற்ற வேண்டும். பயிர் சாகுபடிக்கு முன் நிலங்களை உழவு செய்து, உயிரி உரங்களான அஜோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை மக்கிய தொழு உரத்துடன் இட்டு, மண்புழு உரங்கள், கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தி மண் வளத்தை பெருக்க வேண்டும். மண்ணில் ஆர்கானிக் கரிம அளவை அதிகப்படுத்தி, நுண்ணுயிர்களை பெருக்கி, மண் வளத்தை பேணி காப்பது விவசாயிகளின் கடமை. இயற்கை இடுபொருட்களான பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமில கரைசல், முட்டை அமில கரைசல், தேமோர் கரைசல் ஆகியவை மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையில் மஞ்சள் ஒட்டுப் பொறி, விளக்கு பொறி, வேப்ப எண்ணெய் பயன்படுத்தி பூச்சிகளை கட்டுபடுத்த வேண்டும். ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக உயிரி பூச்சிக் கொல்லிகளான பிவேரியா பிரேஸியானா, வெர்டிஸிலியம் லகானி ஆகியவற்றை பயன்படுத்தலாம். தாவர பூச்சிக் கொல்லிகளான ஐந்து இலை கரைசல், பத்து இலை கரைசலில் நொச்சி, சோற்றுக் கற்றாளை, ஊமத்தை, எருக்கு, வேப்பிலை பயன்படுத்தியும், அக்னி அஸ்திரா - பச்சை மிளகாய், பூண்டு, புகையிலை பயன்படுத்துவதன் மூலமும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.1500 மதிப்பிலான உயிரி உரங்கள், இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. தென்னையில் சுருள் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி, ஒட்டுண்ணி அட்டைகளை விவசாயிகள் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை