உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆக்கிரமிக்க பிள்ளையார் சுழி போட்ட காம்ரேட்கள் உசிலை சந்தைத் திடலுக்குள்

ஆக்கிரமிக்க பிள்ளையார் சுழி போட்ட காம்ரேட்கள் உசிலை சந்தைத் திடலுக்குள்

உசிலம்பட்டி: ஒன்றியத்திடம் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு மாறும் சந்தைத் திடலில், இந்திய கம்யூ., கட்சியினர் பிள்ளையார் சுழி போட்டு ஆக்கிரமிப்பை துவக்கி வைத்துள்ளனர். உசிலம்பட்டி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 7.85 ஏக்கர் சந்தை திடலை நகராட்சியிடம் ஒப்படைக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது. சந்தை திடலுக்குள், தேனி ரோடு, முருகன் கோயில் தெரு என பரந்து விரிந்த பகுதியில் எம்.எல்.ஏ., அலுவலகம், நுாலகம், ரெக்ரியேசன் கிளப், ஒருங்கிணைந்த வேளாண் வளாகம், உழவர் சந்தை, நவதானியம், காய்கறி, மொத்த வியாபார கடைகள் என நுாற்றுக்கணக்கில் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஒன்றிய நிர்வாகம் இருந்த போது தரை வாடகைக்கு வழங்கப்பட்டவையே. இதனை கணக்கீடு செய்து நகராட்சி வசம் ஒப்படைக்க கடந்த வாரம் தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் சர்வேயர்கள், வி.ஏ.ஓ., க்கள் இணைந்து அளவிடும் பணி நடந்து வருகிறது. நகராட்சி சார்பில் சந்தை திடலை கையகப்படுத்தும் முன்பாக, சந்தை திடலுக்குள் தாங்களும் இருந்தது போல காட்டுவதற்காக ஆக்கிரமிப்புகளும் நடக்கின்றன. இதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் இந்திய கம்யூ., கட்சியின் உசிலம்பட்டி தாலுகா ஒன்றிய குழு அலுவலகம் என்ற வாசகம் அடங்கிய தகரத்தினால் உருவாக்கிய கொட்டகை ஒன்றை இரவோடு இரவாக இறக்கி வைத்துள்ளனர். இதேபோல காலியாக உள்ள இடங்களையும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்க மேலும் போட்டிகள் நடக்கிறது. இவற்றை ஊராட்சி, நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ