நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கமிஷனர் ஆஜராக உத்தரவு
மதுரை, : கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை கமிஷனராக இருந்த முரளிதரன், கலெக்டர் தங்கவேல் ஆஜராக உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியிலுள்ள 540 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2019 அக்.23 ல் இரு நீதிபதிகள் அமர்வு,'ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் சொத்துக்களை மீட்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறை கமிஷனராக இருந்த முரளிதரன், கரூர் கலெக்டர் தங்கவேல், கோயில் செயல் அலுவலர் சுகுணா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு,'இவ்விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கையாக மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியலை அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டனர். மீண்டும் நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. நிலத்தை மீட்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லை. ஆவணங்கள் கிடைக்காததே தாமதத்திற்குக் காரணம்;ஆவணங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என அறநிலையத்துறை தரப்பு கூறியுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் இல்லையெனில் மாவட்ட ஆவணக் காப்பகத்தில் ஆவணங்களை பெறுமாறு அறநிலையத்துறைக்கு இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. நடவடிக்கை இல்லை. 27 அரசு அதிகாரிகள், 49 தொழிலதிபர்கள், 38 செல்வாக்கு மிக்க நபர்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருவாய்த்துறையின் சில அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர்களின் உடந்தையுடன் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளது. கோயில் சொத்துக்களின் சட்டப்பூர்வ பாதுகாவலரான அறநிலையத்துறை அதன் கடமைகளைச் செய்யத் தவறிவிட்டது. செல்வாக்கு மிக்க நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அகற்றுவதில் அறநிலையத்துறையுடன் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஒத்துழைக்கத் தயங்குவதாகத் தெரிகிறது. அறநிலையத்துறை கமிஷனர் இப்பிரச்னையை வருவாய்த்துறை மற்றும் உள்துறை செயலர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை. கோயில் நிலத்தை மீட்க பயனுள்ள நடவடிக்கை எடுக்கவில்லை. அறநிலையத்துறை கமிஷனராக இருந்த முரளிதரன், கரூர் கலெக்டர் தங்கவேல், கோயில் செயல் அலுவலர் சுகுணா மற்றும் கரூர் எஸ்.பி.,அக்.17 ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.