மாநகராட்சி மண்டல குறைதீர் கூட்டம்: வெறிச்சோடிய இருக்கைகள்
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு குறைந்த எண்ணிக்கையில் மக்கள் மனு அளித்ததால் ஏராளமான இருக்கைகள் காலியாக கிடந்தன.இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா தலைமையில் நடந்தது. சொத்துவரி திருத்தம், குடிநீர், பாதாளச் சாக்கடை தொடர்பாக 38 மனுக்கள் அளிக்கப்பட்டன. கூட்டம் துவங்கியதும் சிலரே மனு அளித்தனர். பின்னர் ஒன்றிரண்டு பேராக வந்தனர். அவர்கள் வரும் வரை மேயர், கமிஷனர், அதிகாரிகள் காத்திருந்து பெற்றனர்.மண்டல அலுவலக கூட்டம் நடப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட வார்டுகளுக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை. கவுன்சிலர்கள் சிலருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. போதிய விழிப்புணர்வு இல்லாததால்தான் மக்களும் அதிகம் வரவில்லை. காங்., கவுன்சிலர் விரக்தி
இம்மண்டலத்தின் 31 வது வார்டு (தல்லாகுளம்) காங்., கவுன்சிலர் முருகன், 'தனக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் எனது வார்டு மக்களுக்கு குறைதீர் கூட்டம் நடப்பதே தெரியவில்லை என மண்டல தலைவர் சரவணபுவனேஸ்வரியிடம் முறையிட்டார்.அவர் கூறுகையில், என் வார்டு மக்களின் விண்ணப்பங்களை ஆளுங்கட்சி வட்டச் செயலாளர் பெற்று குறைதீர் கூட்டத்திற்கு கொண்டு வந்தார். இது நியாயமா. மண்டல கூட்டம் குறித்த தகவல்களை கவுன்சிலர்களுக்கு உரிய முறையில் தெரிவிக்க மேயர், கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.உதவி கமிஷனர் கோபு, செயற்பொறியாளர் மாலதி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர் பங்கேற்றனர்.