அனுமதியின்றி மரங்களை வெட்டி அகற்றிய தி.மு.க.,வினர்; கனிமொழி எம்.பி., உசிலை வருகைக்காக
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி முன்பாக உள்ள விளையாட்டு மைதானத்தில் கனிமொழி எம்.பி.,யின் கூட்டம் நடத்துவதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி, அதிகாரிகளின் அனுமதி இன்றி தி.மு.க.,வினர் மரங்களை வெட்டி அகற்றினர். உசிலம்பட்டியில் டிசம்பர் இறுதியில் தி.மு.க., எம்.பி., கனிமொழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க உள்ளது. இதற்காக மதுரை ரோட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியின் விளையாட்டு மைதானத்தில் மேடை அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தி.மு.க.. தலைமைச் செயற்குழுஉறுப்பினர் இளமகிழன் தலைமையில் பணிகள் நடக்கிறது. இதற்காக கல்லுாரி முன்பிருந்த பழமையானபுங்கன், 3 வேப்ப மரங்களை தி.மு.க.,வினர் வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் அந்தப்பகுதி மின்கம்பங்களில் ஊராட்சி, மின்வாரிய அதிகாரிகள் அனுமதி இன்றி மின்விளக்குகளைப் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இளமகிழன் கூறியதாவது: ரோடு குறுகலாக இருந்ததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் இந்தப்பகுதியில் ரோட்டை அகலப்படுத்தும் பணியை எனது சொந்த செலவில் நடத்துகிறேன். இரவு நேரத்தில் விபத்து அச்சமின்றி செல்ல 10 மின் விளக்குகள் அமைக்கப்படுகிறது என்றார். விபத்து பகுதியில் ரோட்டை சீர்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் செய்யாமல், நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ''விரைவில் தி.மு.க., எம்.பி., கனிமொழி உசிலம்பட்டி வருவதற்கான ஏற்பாடாக இப்பணிகள் நடக்கின்றன'' என்றார். அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி அகற்றியது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.