மதுரையில் நாய்கள் கண்காட்சி நிறைவு; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
மதுரை: மதுரையில் நடந்த நாய்கள் சிறப்பு கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. மும்பை, கோலாப்பூர் உட்பட நாடு முழுதும் இருந்து விதவிதமான வெளிநாட்டு இன நாய்கள் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தின. ராட் வேலர்
மதுரை தமுக்கம் மைதானத்தில் கெனைன் கிளப் சார்பில் நடந்த கண்காட்சி நிறைவு நாளான நேற்று, சிப்பிப்பாறை, கேரவான் ஹவுண்ட், கன்னி, கோம்பை போன்ற இந்திய நாட்டு வகைகளுடன் பாக்ஸர், டெரியர், ஜெர்மன் ஷெப்பர்ட், ஆப்கன் ஹவுண்ட், டோபர்மேன், கிரேட் டேன், ராட் வேலர், பக், செயின்ட் பெர்னார்டு போன்ற வெளிநாட்டு இனங்களும் கலந்து கொண்டன. இத்தாலி வகையைச் சேர்ந்த கேன் கோர்சோ, ரஷ்யாவின் பொம்மை நாய் என்றழைக்கப்படும் டாய் பூடில், ஆப்ரிக்க வகை ரோடீசியன் ரிட்ஜ்பேக் போன்றவை பார்வையாளர்களை பரவசப்படுத்தின.மதுரை கெனைன் கிளப் செயலர் ராமநாதன் கூறியதாவது:சர்வதேச நாய்களுடன் நம் நாட்டு இனங்களும் போட்டியிட முக்கியத்துவம் கொடுத்தோம். இதற்காக நாட்டு இனங்களுக்கு பரிசளித்து ஊக்கப்படுத்தினோம். சர்வதேச அங்கீகாரம்
உலகளவில் நாய்களை, குணநலன்களின் அடிப்படையில் 10 வகை குழுக்களாக பிரிப்பர். கெனைன் கிளப் சார்பில், 11வது குழுவை இந்திய இனங்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்திஉள்ளோம். இக்குழுவில் இடம்பெறும் நாய்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற முயற்சி நடக்கிறது.கண்காட்சியில், 700க்கும் மேற்பட்ட 45 வகைகளான நாய்களில் எட்டு சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டன. நடுவர்களாக சுதர்சன், நியூசிலாந்தின் பிரையன் ஹாரிஸ், தாய்லாந்தின் சாய் குல்னிபட்டி செயல்பட்டனர். வெளிநாடுகளில் நாய்களை கையாளுவோரில் பெண்கள் அதிகம். நம் நாட்டில் விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. முழுதும் பெண்களே போட்டியை நடத்தும் வகையில் திட்டமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.