சுட்ட எண்ணெய்யில் மீண்டும் சுடாதீங்க
மதுரை: ரோட்டோர கடைகளில் ஏற்கனவே வடை, பலகாரம் சுட்ட பழைய எண்ணெய்யில் மீண்டும் பலகாரம் செய்தால் உணவுப்பாதுகாப்புத்துறை மூலம் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என துறையின் மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் எச்சரித்துள்ளார்.அவர் கூறியதாவது: மதுரை மாவட்டம் முழுவதும் உணவகங்கள், பேக்கரி, ஓட்டல்கள் உட்பட 900 கடைகளில் இருந்து ஒருமுறை பயன்படுத்தி சமைத்த பழைய சமையல் எண்ணெய் பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதற்கென 6 ஏஜன்சிகள் நியமிக்கப்பட்டு இக்கடைகளில் இருந்து மாதம் 15 முதல் 17 டன் எண்ணெய் பெறப்பட்டு பயோடீசலாக மாற்றப்படுகிறது. பழைய எண்ணெய்க்கு ஒரு லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை விலை தரப்படுகிறது. அக். 29 வரையான 29 நாட்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக இனிப்பு, கார உணவுகளை கடைகள் தயாரிப்பதால் 22 டன் பழைய எண்ணெய் பெறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கூடுதலாக 5 டன் பழைய எண்ணெய் கிடைக்கும்.ரோட்டோர கடைகள் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுபடி பயன்படுத்தக்கூடாது. உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பழைய எண்ணெய் பயன்படுத்துவது தெரிந்தால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என்றார்.