மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச நீச்சல்குளம் அமைய எதிர்பார்ப்பு: சென்னைக்கு அடுத்து எல்லா அரங்குகளும் இருக்கும் நிலையில் ... தத்தளிப்பு
மதுரை: சென்னைக்கு அடுத்து அனைத்து விளையாட்டுக்கான அரங்குகளும் நிறைந்துள்ள மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச நீச்சல்குளம் அமைப்பதற்கு மட்டும் நிதி ஒதுக்காமல் இழுபறியாக உள்ளது.இங்கு 2006 ல் அமைக்கப்பட்ட செயற்கை ரப்பர் துகள்களால் பொருத்தப்பட்ட 400 மீட்டர் 'சிந்தடிக் டிராக்' சேதமடைந்து ரப்பர் துகள்கள் தேய்ந்தும் பிய்ந்தும் போனதால் வீரர், வீராங்கனைகள் இந்த டிராக்கில் பயிற்சி பெற முடியவில்லை. போட்டிகளும் நடத்த தகுதியற்றதாக மாறியது. டிராக்கின் உட்புறமுள்ள இயற்கை புல்தரை கால்பந்து மைதானத்திலும் புற்கள் காய்ந்து வெறும் தரையானது.ஓராண்டுக்கு முன் ரூ.8.24 கோடி மதிப்பு ஒதுக்கப்பட்டு டிராக்கில் செயற்கை ரப்பர் துகள்கள் பொருத்தப்பட்டு, நடுவில் இரு மாதங்களுக்கு முன் இயற்கை புல்நாற்றுகள் நடப்பட்டு தற்போது பராமரிக்கப்படுகிறது. இனி அடுத்த பத்தாண்டுகளுக்கு டிராக்கை பராமரித்தால் போதும். தொடர்ந்து மாநில, தேசிய தடகள போட்டிகள் நடத்தமுடியும்.அடுத்ததாக ஒலிம்பிக் அகாடமி என்ற பெயரில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் அதிநவீன ஜிம் அரங்கு, இன்டோர் கபடி, டேபிள் டென்னிஸ் அரங்குகள் கட்டுமானம் நடக்கிறது. மேலும் இத்தொகையில் கூடைபந்து, டென்னிஸ் தலா இரண்டு அரங்குகளின் சேதமடைந்த தரைத்தளம் சரிசெய்யப்பட்டது. அடுத்ததாக ரூ.ஒரு கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இன்டோர் அரங்கில் 'சிட்டிங்' வாலிபால், டேபிள் டென்னிஸ், செட்களை மாற்றியமைக்கும் வகையிலான பல்திறன் அரங்கு, பிரத்யேக பிட்னஸ் வசதி, கழிப்பறை வசதிகளுடன் கட்டுமானம் நடக்கிறது.வரும் டிசம்பரில் மதுரை மற்றும் சென்னையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடக்க உள்ளது. மதுரையில் சர்வதேச தரத்திலான சிந்தடிக் ஹாக்கி அரங்கு இருந்தாலும் சிந்தடிக் தரை அமைத்து பத்தாண்டுகளுக்கு மேலானதால் அவற்றை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரங்கையொட்டி பார்வையாளர் காலரி, அதற்கான அலுவலகம், வீரர்கள் ஓய்வறை, பிற வசதிகளுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. நவம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை, சென்னைக்கு சேர்த்து ரூ.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.எல்லாவற்றுக்கும் மேலான நான்காண்டுகளாக மதுரையில் சர்வதேச தரத்திலான 50 மீட்டர் நீச்சல்குளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு அவ்வப்போது வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் புதிய 50 மீட்டர் நீச்சல்குளத்திற்கான இடத்தை பார்வையிடுவதோடு சரி. ரூ.6 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தடகளம், ஹாக்கி, கால்பந்து என சர்வதேச போட்டிகள் நடத்தும் அளவிற்கு தகுதிவாய்ந்த மதுரையில் 50 மீட்டர் நீச்சல்குளத்திற்கு மட்டும் அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் 50 மீட்டர் நீச்சல்குளம் அமைக்கப்பட்டால் சென்னைக்கு அடுத்து மதுரை சிறந்த விளையாட்டு களமாக மாறும்.