உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நம்பர் 1க்கு ரூ. 10 வசூல் பலே ஒப்பந்த நிறுவனம் சிக்கியது * மாநகராட்சி புகாரில் வழக்கு

 நம்பர் 1க்கு ரூ. 10 வசூல் பலே ஒப்பந்த நிறுவனம் சிக்கியது * மாநகராட்சி புகாரில் வழக்கு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ரூ.2க்கு பதில் ரூ.10 வசூலித்த தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.பஸ் ஸ்டாண்ட் கட்டணக் கழிப்பறைகளை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் கொள்ளை வசூலில் ஈடுபடுகின்றன. கழிப்பறையை சுத்தமாக பராமரிப்பதில்லை உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து எழுந்தன. கடந்த மாதம் துணைமுதல்வர் உதயநிதி அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிப்பறைகள் பராமரிப்பை கண்காணிக்காத மாநகராட்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.கமிஷனர் தினேஷ்குமார் உத்தரவுபடி நகர்நல அலுவலர் வினோத்குமார் ஒரு பயனாளியாக நேற்று சென்று கழிப்பறையை பயன்படுத்த கட்டணம் கேட்டபோது அங்குள்ள பணியாளர்கள் கூடுதலாக வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம், பணியில் இருந்தோர் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வினோத்குமார் கூறியதாவது: சிறுநீர் கழிக்க ரூ.2, மலம் கழிக்க ரூ. 5, குளிக்க ரூ.10 என வசூலிக்க வேண்டும். ஆனால் சிறுநீர் கழிக்கவே ரூ.10 வசூலிப்பது தெரியவந்தது. ஒப்பந்த பணியாளர்களை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சைனி பெண்கள் சிறுசேமிப்பு சிக்கன நாணய சங்கம் ஒப்பந்த அனுமதியை ரத்து செய்ய கமிஷனருக்கு பரிந்துரைத்துள்ளேன் என்றார்.

கமிஷனர் எச்சரிக்கை

பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாநகராட்சி புகார் மையம் எண்: 78716 61787ல் புகார் தெரிவிக்கலாம் அல்லது வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் ஒப்பந்ததாரர், நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ