மனமகிழ் மன்றத்தில் சூதாட அனுமதிக்க முடியாது
மதுரை: 'மனமகிழ் மன்றத்தில் பணம் வைத்து சீட்டு விளையாட அனுமதிக்க முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே 'சிங்கப்பூர் ரிலாக்ஸ்' மனமகிழ் மன்றம் செயலர் பிரேம்குமார் தாக்கல் செய்த மனு: 'எங்கள் மன்றத்தின் விவகாரங்களில் கரூர் எஸ்.பி., குளித்தலை டி.எஸ்.பி., தோகைமலை போலீசார் எந்த வகையிலும் தலையிட அல்லது இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டார். நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'மனுதாரரின் மன்றம் பதிவு செய்யப்பட்டது. அங்கு உறுப்பினர்கள், பணம் வைத்து சீட்டு விளையாடுவதாகக் கூறி, போலீசார் தொடர்ந்து மன்றத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்கின்றனர்' என்றார். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆண்டனி சகாய பிரபாகர், 'பணம் வைத்து சீட்டு விளையாடுவதற்கு வசதியாக, அதை பாதுகாக்கும் வகையில் உத்தரவு கோரப்படுகிறது. கோரும் நிவாரணம் ஏற்புடையதல்ல' என விவாதித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இளைஞர்களின் நலனை பாதுகாப்பதே இந்நீதிமன்றத்தின் முதன்மையான நோக்கம். மன்றத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதற்கு அனுமதி கோருவதில் எந்த தகுதியும் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.