வந்தே பாரத் ரயில் மீது கல்லெறிந்த சிறுமி : கண்ணாடி சேதம்
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வந்தே பாரத் ரயில் மீது கற்களை எறிந்த சிறுமியை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்.,) போலீசார் எச்சரித்தனர். கடந்த செப். 23மாலை 5:40 மணியளவில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயில் (20628), மதுரையை கடந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கொடை ரோடு அருகே சென்றபோது ரயிலின்மீது கற்கள் எறியப்பட்டதில் பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது. இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 'ரயில் மதாத்' செயலி மூலம் புகார் அளித்ததன்அடிப்படையில், மதுரை ஆர்.பி.எப்., போலீசார் விசாரித்தனர். ரயிலின் முன்பக்க இன்ஜின் மற்றும் கார்டு பெட்டியில் பொருத்தப்பட்ட சி.சி.டிவி., காட்சிகளை ஆய்வு செய்ததில், கொடை ரோடு ஸ்டேஷன் அருகே கே.புதுாரைச் சேர்ந்த மணிகண்டனின் 12 வயது மகள் விளையாட்டாக கல்லெறிந்தது தெரிந்தது. 'இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயலில் மகள் ஈடுபடக்கூடாது' என மணிகண்டனிடம் உறுதிமொழி பெற்ற போலீசார், அவரை எச்சரித்து அனுப்பினர். மேலும், வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களின் மீது கற்களை எறிவதால், ரயில்வேக்கு பொருட்சேதம் ஏற்படுவது மட்டுமின்றி பயணிகள் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என போலீசார் ,கவுன்சிலர் கருணாகரன் முன்னிலையில் அப்பகுதியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.