உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனையில் ரேபிஸ் நோயாளி தாக்குதல்; பாதிக்கப்பட்டவருக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு

மருத்துவமனையில் ரேபிஸ் நோயாளி தாக்குதல்; பாதிக்கப்பட்டவருக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு

மதுரை திருச்சி அரசு மருத்துவமனையில் ரேபிஸ் நோயாளி தாக்கியதில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்ததையடுத்து விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், 2014ல் சாலை விபத்தில் காயமுற்ற தன் மகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ரேபிஸ் நோயாளியால் தாக்கப்பட்டார். மறுநாள் அந்நோயாளி இறந்த நிலையில் மகனின் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. ரேபிஸ் உள்நோயாளிகளுக்கு தனி வார்டு, பாதுகாப்பு இல்லாததால் தாக்குதல் நடந்தது. ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.அரசு தரப்பில், மனுதாரரின் மகனுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வெறிநாய்க்கடிக்கான தனி வார்டு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக ரேபிஸ் நோயாளி தப்பினார். ரேபிஸ் ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவாது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அவர் குணமடைந்து 2014 டிச.20ல் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார் என தெரிவித்தது. இதைதொடர்ந்து மனுதாரர் மற்றும் அவரது மகனுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இவ்வழக்கின் மேல்முறையீடு விசாரணையின்போது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கீளீட் அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஏற்கனவே பிறப்பித்த இடைக்காலத் தடையை நீட்டித்து, விசாரணையை டிச.,11 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ