வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நட்டது சரி, யாரு பராமரிப்பது. சும்மா ஏமாற்றுவேலை
மதுரை: மதுரையில் ரோடு விரிவாக்க பணிக்காக அகற்றப்பட உள்ள மரங்களுக்கு பதிலாக ரோட்டோரம் சோலைக் காடுகளை உருவாக்க நெடுஞ்சாலைத் துறை ஏற்பாடு செய்துள்ளது.சுற்றுச் சூழல் மேம்பாட்டில் மரங்களின் பங்கு அளவிடற்கரியது. மழையை வரவழைப்பதுடன், ஒலி, துாசி, புகை உட்பட அனைத்து மாசுகளையும் குறைத்து புவியை சுத்தமாக்குவதில் மரங்கள் முக்கியமானவையாக விளங்குகின்றன.சமுதாய வளர்ச்சியில் மரங்கள் வெட்டப்படுவதும், பசுமை போர்வை குறைந்து வருவதும் இயல்பாக நடக்கிறது. எனவே மரங்களை வளர்க்க அரசும், தொண்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. இதையடுத்தே அரசு பணிகளுக்காக ஒரு மரத்தை வெட்டினால், அதற்கு பதிலாக 10 மரங்களை நடவேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.இதை அரசின் மதுரை நெடுஞ்சாலைத் துறையும் கடைபிடித்து மரக்கன்றுகளை நட்டு பசுஞ்சோலையை உருவாக்கியுள்ளது.. மதுரை - அழகர்கோயில் இடையே 20 கி.மீ., ரோடு விரிவாக்கப் பணியில் 16.5 கி.மீ., வரை வேலைகள் முடிந்துள்ளன. இன்னும் கள்ளந்திரி கால்வாய் முதல் அழகர்கோயில் வரை 3.5 கி.மீ., பணிகள் நடக்க வேண்டியுள்ளது. இதற்கான பூமிபூஜை சமீபத்தில் நடத்தப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.இங்கு சாலையை அகலப்படுத்த 150 மரங்கள் வெட்டப்பட வேண்டும். அதற்கு பதிலாகபத்து மடங்காக ஆயிரத்து 50 மரங்கள் நடப்பட வேண்டும். இவற்றை முன்னதாகவே வைத்து விட வேண்டும் எனக் கூறினர். ரோட்டோரம் குடிநீர் குழாய், மின்இணைப்பு என பலமுறை தோண்டி விடுவதால் வருங்காலத்தில் எடுக்கும் சூழல் உருவாகிறது. எனவே தண்ணீர் தேங்கும் பகுதியில் சோலையாக உருவாக்கி வருகின்றனர். இதன்படி கள்ளந்திரியை அடுத்து ரோட்டோரத்தில் 850 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதற்காக ரூ.15 லட்சம் நிதிஒதுக்கி உள்ளனர்.நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், உதவி பொறியாளர் சக்திவேல் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதிகாரிகள் கூறுகையில், ''இந்த ரோடு பணியில் மேலும் 26 மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவற்றை நடுவதற்கு இடமில்லாத நிலையில் அவற்றை வனத்துறையினரே நட்டு பராமரிக்கவும் நெடுஞ்சாலைத் துறை நிதி வழங்கியுள்ளது'' என்றனர்.
நட்டது சரி, யாரு பராமரிப்பது. சும்மா ஏமாற்றுவேலை