உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வட மாநில பெண்களை இழிவுபடுத்திய அமைச்சர் துரைமுருகன் நீக்கப்படுவாரா முதல்வர் ஸ்டாலினுக்கு எச்.ராஜா கேள்வி

வட மாநில பெண்களை இழிவுபடுத்திய அமைச்சர் துரைமுருகன் நீக்கப்படுவாரா முதல்வர் ஸ்டாலினுக்கு எச்.ராஜா கேள்வி

மதுரை: ''வடமாநில பெண்கள் குறித்து தவறாக பேசிய துரைமுருகனை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கி இருக்க வேண்டும்,'' என, மதுரையில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவையொட்டி துண்டு பிரசுரம் விநியோகித்த பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., அரசு ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக, பிரிவினை சக்திகளின் கூடாரமாகவுள்ளது. ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் போதைப் பொருட்கள் இல்லாத தமிழகமாக இருந்தது. தமிழக அரசு இன்றுவரை ஒரு கிராம் 'சிந்தடிக் டிரக்ஸ்' பிடித்துள்ளதா. ஏனென்றால் அதை தி.மு.க.,வைச் சேர்ந்த ஜாபர் சாதிக் விநியோகம் செய்தார். அடுத்த தலைமுறையை அழிக்கக்கூடிய தீயசக்தியாக முதல்வர் ஸ்டாலின் அரசு உள்ளது. அதனால் அக்கட்சியை துாக்கி எறிய மக்கள் முடிவு செய்து விட்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடப்பதை தி.மு.க., எதிர்க்கிறது. 11வது முறையாக தற்போது இம்முகாம் நடந்து உள்ளது. 10 முறை நடந்த போதும் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. தற்போது மட்டும் ஏன் எதிர்க்கின்றனர். துரைமுருகனை நீக்குவரா முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியிலேயே 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது. ஆர்.கே.நகரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெறும் போது 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருக்கின்றனர் என ஸ்டாலின்தான் கோர்ட் வரை சென்று கூறினார். பீகாரில் இதுவரை ஒரு புகார்கூட வாக்காளர் திருத்தம் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை. அதுபோல இங்கு வரவேண்டாமா. தி.மு.க.,வின் டி.என்.ஏ., வெறுப்பு அரசியலாக உள்ளது. வடமாநில பெண்கள் ஐந்து கணவர், பத்து கணவர் கட்டிக் கொள்கின்றனர் என இழிவாக அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கி இருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !