நெசவாளர்களிடம் வேட்டிகளை கொள்முதல் செய்ய வழக்கு உயர்நீதின்றம் நோட்டீஸ்
மதுரை: கைத்தறி நெசவாளர்களிடம் தைப்பொங்கலுக்குரிய இலவச வேட்டிகளை கொள்முதல் செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டம் அண்டம்பாறை துரைராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 கூட்டுறவு சங்கங்களில் அரசின் இலவச வேட்டிகளை நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். அவர்கள் கைத்தறி மற்றும் பெடல் தறி தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். நெசவாளர்கள் உற்பத்தியை முழுமையாக நிறைவு செய்யும் வகையில், வார்ப்பு நுால் வழங்க வேண்டும். 2027 தைப்பொங்கலையொட்டி மக்களுக்கு இலவசமாக வினியோகிக்க ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள 8 முழம் வேட்டிகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தறிகளை நவீனமயமாக்கி தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டும். இதற்கு போதிய நிதியுதவி அல்லது மானியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மோகன்காந்தி ஆஜரானார். நீதிபதிகள் கைத்தறி, ஜவுளி மற்றும் கதர்துறை செயலர், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.13 க்கு ஒத்திவைத்தனர்.