அரசு மருத்துவமனையில் ரத்தவியல் துறை துவக்கம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவியல் துறையின் கீழ் புறநோயாளிகள் பிரிவு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் வார்டை துவக்கி வைத்து கூறியதாவது: சென்னைக்கு அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் தான் ரத்தவியல் பிரிவு, எலும்பு மஜ்ஜை பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. வெள்ளிதோறும் காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை இந்த வார்டில் புறநோயாளியாக சிகிச்சை பெறலாம். ரத்த புற்றுநோய், ரத்த உற்பத்தி, வெள்ளை அணுக்கள், தட்டை அணுக்கள் தொடர்பான நோய்களுக்கு பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்கப்படும். குழந்தைகள் நலப்பிரிவு, பொதுமருத்துவம், புற்றுநோய் என பல்வேறு துறை புறநோயாளிகள் பிரிவுகளுக்கு சென்று சிகிச்சை பெற்ற நோயாளிகள் நேரடியாக ரத்தவியல் வார்டில் சிகிச்சை பெற முடியும். எலும்பு, ரத்தம் தொடர்பான நோய்கள், ரத்தம் உறையும் தன்மை குறைவாக இருப்பதற்கும் நேரடியாக இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அதிநவீன எலும்பு மஜ்ஜை பிரிவு துவங்குவதற்கான இடம் டீன் அலுவலக முதல் மாடியில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படும் தென்மாவட்ட நோயாளிகள் இதன் மூலம் பயன்பெற முடியும் என்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் குமரவேல், அரசு மருத்துவக் கல்லுாரி துணைமுதல்வர் மல்லிகா, பொதுமருத்துவத்துறை, நோயியல் துறைத் தலைவர்கள் செந்தில், ராணி, குழந்தைகள் நலப்பிரிவு இயக்குநர் அனுராதா, பேராசிரியர்கள் குணா, ஜெபசிங், ஆர்.எம்.ஓ., முரளிதரன், உதவி பேராசிரியை பிரியா பங்கேற்றனர்.