ஆக்கிரமிப்பு அகற்ற தாமதம் தாசில்தார் துாங்கிவிட்டாரா உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை : சிவகங்கை மாவட்டம் கண்டதேவி நீர்நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் காரைக்குடி தாசில்தார் துாங்கிக் கொண்டிருந்துவிட்டு தற்போது விழித்தெழுந்துள்ளார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கண்டதேவி வெங்கடாச்சலபாண்டியன் தாக்கல் செய்த மனு: கண்டதேவி நீர்நிலை கால்வாய், களத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டர், தேவகோட்டை ஆர்.டி.ஓ., காரைக்குடி தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:இவ்வழக்கு 2021 ல் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இறுதி உத்தரவு பிறப்பிக்க எடுத்துக்கொள்ளப்பட்டது. காரைக்குடி தாசில்தார் இவ்விஷயத்தில் ஏன் துாங்கிக் கொண்டிருந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதி முடிவுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட பின் அவர் திடீரென விழித்தெழுந்ததை காண்கிறோம். தாசில்தாரின் தாமதம் மற்றும் காலம் கடத்தும் செயலை நாங்கள் பாராட்டத் தயாராக இல்லை. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதை 4 வாரங்களில் தாசில்தார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.