ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு எதிராக வழக்கு மேல் நடவடிக்கை கூடாதென ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
மதுரை: குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கில், 'முதற்கட்ட பணியை மேற்கொள்ளலாம். அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக்கூடாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், கிராமங்களின் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்கள், கவிஞர்கள், மலர்களின் பெயர்களை சூட்ட வேண்டும் என, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. மேலும், 'ஜாதி சான்றிதழ்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள தமிழக மின் ஆளுமை முகமை மூலம் முகாம்கள் நடத்த வேண்டும். 'ஆதார் அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மின் ஆளுமை முகமை மூலம் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதி பெயர்களை கொண்ட குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொது சொத்துக்களின் பெயர்களை மதிப்பீடு செய்தல், பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக மக்களிடம் கலந்துரையாடல் நடத்துதல், பெயர்களை மாற்றுவதற்கு விண்ணப்பங்களை பெறுதல், பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பை மாவட்ட அரசிதழில் வெளியிடுவதற்கு காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் நவ., 19க்கு முன் நடைமுறைக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மக்களிடம் கருத்து கோராமல் அவசர கதியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் செய்வது அரசியலமைப்பு சட்டம், பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டிற்கு எதிரானது. மக்களின் தனிப்பட்ட ஆவணங்களின் பெயர் மாற்றம் செய்வதில் நடைமுறை சிரமங்கள் உள்ளன. ஜாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அரசாணை பிறப்பிப்பு நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், 'ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்கள், முகவரியில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொள்ளாமல், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, வாதிட்டார். நீதிபதிகள், 'பள்ளி, கல்லுாரி ஆவணங்கள், வருமான வரி அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் உடனடியாக எப்படி மாற்றம் செய்ய முடியும். முன்னறிவிப்பு இல்லாமல் செய்தால் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வார்கள்?' என, கேள்வி எழுப்பினர். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதம்: அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. தீண்டாமை கூடாது என்கிறது. சமூக நீதியை பின்பற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்படி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மனுதாரர் தெளிவுபடுத்தவில்லை. உ.பி.,யில் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ், மஹாராஷ்டிராவில் அவுரங்காபாதிற்கு சத்ரபதி சம்பாஜி நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டில்லியில் பல சாலைகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபனை இல்லை. தமிழகத்தில் ஆட்சேபனை இருந்தால், மக்கள் கருத்து தெரிவிக்க மாநில அரசு அவகாசம் அளித்துள்ளது. மக்களின் கருத்துகளை மதிப்பீடு செய்து முடிவெடுக்கப்படும். இழிவுபடுத்தும் வகையில் பெயர்கள் இருந்தால் நீக்கப்படும். தற்போது உத்தேசமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது இறுதி உத்தரவு அல்ல. இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு வாதிட்டார். நடவடிக்கை கூடாது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜாதி பெயர்கள் நீக்குவது குறித்த மாநில அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேவேளையில், பல்வேறு நடைமுறை சிரமங்கள் உள்ளதாக மனு தாரர் தரப்பு கூறுகிறது. இந்த விவகாரத்தில், முதற்கட்டமாக கள ஆய்வு செய்வது, மக்களிடம் கருத்து கோரும் பணியை மேற்கொள்ளலாம். அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர். மேலும், தமிழக தலைமை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.