திருப்பரங்குன்றம் மலை விவகாரம் அவமதிப்பு வழக்கில் நோட்டீஸ் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சமண கோயில்கள், பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடவரை கோயிலை பாதுகாக்க வேண்டும். ஒட்டுமொத்த மலையையும் மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தொல்லியல்துறையின் அனுமதியுடன் யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மலையைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், இடிபாடுகளை அகற்ற வேண்டும் என மத்திய தொல்லியல்துறை இயக்குனர், தமிழக அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். பிப்.19ல் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மத்திய கலாசாரத்துறை செயலர், தொல்லியல்துறை இயக்குனருக்கு புதிதாக மனு அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய வாய்ப்பளித்தபின் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். ரமேஷ் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு புதிதாக மனு அனுப்பினேன். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. மத்திய கலாசாரத்துறை செயலர் விவேக் அகர்வால், மத்திய தொல்லியல்துறை இயக்குனர்கள் ராம்ஜி நிகாம், யதுபீர் சிங் ராவத் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். நீதிபதிகள் மேற்கண்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.