டயாலிசிஸ் பணியாளர்கள் நியமன வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மதுரையை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியுள்ளதாவது:சிறுநீரகம் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் ரத்தம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.இது, தற்காலிக மற்றும் பயிற்சி மாணவர்கள் மூலம் செய்யப்படுகிறது. இதற்கு போதிய நிரந்தர தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லை.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில், 624 தொழில்நுட்ப பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், 160 பேர் மட்டுமே தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். போதிய பணியாளர்களை நியமிக்க கோரி, தமிழக சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர் மோகன் அமர்வு நேற்று, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30க்கு ஒத்திவைத்தது.