மோசடி நிறுவன சொத்துக்களை முடக்க டான்பிட் சட்டத்தில் திருத்தம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:பொருளாதார குற்றங்களில் மோசடி நிறுவன சொத்துக்களை முடக்க, விற்பனை செய்ய நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரியை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் வகையில் 'டான்பிட்' சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.மதுரை, தேனி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த சில நிதி நிறுவன மோசடி வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க உத்தரவிடக்கோரி மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம் (டான்பிட்) 1997 ல் இயற்றப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவு 2000 முதல் செயல்படத் துவங்கியது. அது சமர்ப்பித்த விபரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 சதவீதம் தொகைகூட வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.மோசடி நிதி நிறுவனம் மற்றும் குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கி, விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை வழங்க டான்பிட் சட்டத்தில் வழிவகை உள்ளது. டான்பிட் சட்டப்படி டி.ஆர்.ஓ., தான் நிதி நிறுவன சொத்துக்களை முடக்க, விற்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். டி.ஆர்.ஓ.,களுக்கு பணிப்பளு அதிகம். இதனால் மோசடி வழக்குகளில் நிறுவன சொத்துக்களை முடக்க தாமதம் ஏற்படுகிறது.புதிய பி.என்.எஸ்., சட்டப்படி எஸ்.பி.,யிடம் விசாரணை அதிகாரி அனுமதி பெற்று நிதி நிறுவன சொத்துக்களை முடக்க சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். பொருளாதார குற்றங்களில் விசாரணை அதிகாரியே சொத்துக்களை முடக்க, விற்பனை செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்கும் வகையில் 'டான்பிட்' சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசு முயற்சிக்க வேண்டும்.நிதி நிறுவன மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக விசாரணை அமைப்பை சார்ந்துள்ளனர். பல வழக்குகள் எப்.ஐ.ஆர்., நிலையில் தான் உள்ளன. விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்குமா என தெரியாது. தீர்வு கிடைக்க, வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.பொருளாதார குற்றப்பிரிவில் போதிய ஊழியர்கள் இல்லை. வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறையிடமிருந்து விபரங்களை சேகரிக்க விசாரணை அமைப்பு சந்திக்கும் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.ஒவ்வொரு விசாரணையின் போதும் விசாரணை அதிகாரிகளை அழைப்பதை அரசு வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும். எழுத்துப்பூர்வ ஆவணங்களை பெற்றுக்கொண்டு, தேவையெனில் காணொலி வழியாக விசாரணை அதிகாரியிடம் உறுதி செய்து கொள்ளலாம்.தேவையின்றி நீதிமன்றங்களில் காத்திருப்பதை தவிர்க்க உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் காணொலி வசதி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.