வாடிவாசல் அருகே குடிநீர் தொட்டிக்கு எதிரான பொதுநல வழக்கு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பதற்கு எதிரான பொதுநல மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. அலங்காநல்லுார் ஒன்றிய பா.ஜ.,தலைவர் இருளப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு: அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கும் அரங்கின் வாடிவாசல் அருகில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் துவக்கியுள்ளது. ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். ஜல்லிக்கட்டு குழுவினருடன் கலந்தாலோசிக்கவில்லை. பொது அறிவிப்பு வெளியிடவில்லை. அது நெரிசலான இடம். தொட்டி அமைப்பதால் ஜல்லிக்கட்டு நடத்தும்போது கூட்ட நெரிசல் ஏற்படும். வாடிவாசல் அருகே பின்புறம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்க தடை விதிக்க வேண்டும். மாற்று இடத்தை தேர்வு செய்து அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. அரசு பிளீடர் திலக்குமார்: பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்காக நத்தம் நிலத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடையூறு ஏற்படாது என்றார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மக்கள் பயன்பாட்டிற்காக அரசு நிலத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்படுகிறது. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.