கிராமப்புற மாணவர்கள் போட்டித்தேர்வில் பங்கேற்க வசதி உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கிராமப்புற மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்துவது மற்றும் இதர வசதிகளை செய்ய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. கொடைக்கானல் வழக்கறிஞர் மனோஜ் இமானுவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: சட்டம், விவசாயம் மற்றும் அது சார்ந்த அறிவியல், கட்டடக்கலை, சார்ட்டர்டு அக்கவுண்டன்ட், பேஷன் டிசைனிங், விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிர்வாகம், கடல்சார் படிப்புகளுக்கு தேசிய நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த உயர்படிப்புகளுக்கு வழிகாட்ட அரசு பயிற்சி மையங்கள் இல்லை. நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வுக்குரிய பயிற்சி மையங்களை தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும். நுழைவுத் தேர்வுக்குரிய ஆன்லைன் விபரங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது அரசின் நிர்வாக ரீதியான முடிவிற்குட்பட்டது. நீதிமன்றம் தலையிட முடியாது. அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கிராமப்புற மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்துவது மற்றும் இதர வசதிகளை செய்ய அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.