பழமார்க்கெட்டில் குப்பைத் தொட்டிகள் உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : மதுரை கே.கே.நகர் பழமார்க்கெட்டில் போதிய குப்பைத் தொட்டிகள் அமைப்பதற்கான திட்டத்தை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை கிருஷ்ணகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கே.கே.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பழமார்க்கெட் உள்ளது. இங்கு தேங்கும் கழிவுகளை அகற்ற மாநகராட்சி தரப்பில் போதிய வசதிகளை செய்யவில்லை. பழ வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு வெளியே குப்பைகளை குவிக்கின்றனர். அவற்றை மாடுகள் உட்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது. போதிய குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். கழிவுகளை மார்க்கெட் வளாகத்திற்கு வெளியே குவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோகுல் அபிமன்யு ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மார்க்கெட் வளாகத்தில் எங்கெங்கு குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதற்குரிய போட்டோ ஆதாரம், போதிய குப்பைத் தொட்டிகள் அமைப்பதற்கான செயல் திட்டத்தை மாநகராட்சி தரப்பில் அக்.15ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.