உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நம்பிக்கையில்லா தீர்மானம் எதிராக நகராட்சி தலைவி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிராக நகராட்சி தலைவி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவருக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவித்ததற்கு எதிராக தாக்கலான வழக்கில், ஜூலை 17 ல் நடைபெறும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவு குறித்து தெரிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அ.தி.மு.க.,12, தி.மு.க.,9, ம.தி.மு.க., 2, காங்.,1, எஸ்.டி.பி.ஐ.,1, சுயேச்சைகள் 5 கவுன்சிலர்கள் உள்ளனர். 2022 ல் தலைவர் பதவிக்கான தேர்தலில் எனக்கும், அ.தி.மு.க.,வின் முத்துலட்சுமிக்கு தலா 15 ஓட்டுகள் கிடைத்தது. குலுக்கல் முறை மூலம் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.2023 ல் சில கவுன்சிலர்கள் என் மீது பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அது தோல்வியடைந்தது. நான் தலைவர் பதவிக்குரிய கடமையை நிறைவேற்றவில்லை எனக்கூறி பதவி நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 24 கவுன்சிலர்கள் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். ஜூலை 2 ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சில கவுன்சிலர்களின் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கில் பொய் குற்றச்சாட்டுகளை கூறி என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கினர். குரல் ஓட்டெடுப்பு நடந்தது. தீர்மானம் வெற்றி பெற்றதாகக்கூறி அரசின் ஒப்புதலுக்காக கமிஷனர் அனுப்பியுள்ளார். அரசின் ஒப்புதல் இல்லாமல் எனது அறையை பூட்டி கமிஷனர் சீல் வைத்தார். ஆவணங்களை எடுத்துச் சென்றார்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள்படி தலைவர் அல்லது துணைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை பின்பற்றவில்லை.சங்கரன்கோவில் நகராட்சியில் பெரும்பான்மை கவுன்சிலர்களால் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும். புதிய தலைவரை தேர்வு செய்ய தடை விதிக்க வேண்டும். முறைப்படி கூட்டம் மூலம் ஓட்டுப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி சி.சரவணன் விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரித்விராஜ் ஆஜரானார்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், 'ஜூலை 17 ல் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்,' என்றார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ஜூலை 17 ல் நடக்கும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவு குறித்து ஜூலை 18 ல் இந்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !