அரசு போக்குவரத்துக் கழகத்தில்வேலை செய்யாத தொழிற்சங்கத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, : அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை செய்யாமல் சம்பளம் பெறும் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரை பணியில் ஈடுபடுத்த தாக்கலான வழக்கில் தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கனகசுந்தர் 2019 ல் தாக்கல் செய்த மனு:மதுரை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் அண்ணா தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சில டிரைவர், கண்டக்டர்கள் இதரப் பணி என்ற பெயரில், எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், வேலை செய்ததாக வருகைப் பதிவு செய்யப்படுகிறது. இவர்களுக்கு சம்பளம், படிகள் மாதம் ரூ.60 லட்சம் வழங்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ள போக்குவரத்துக் கழகத்திற்கு மேலும் இழப்பு ஏற்படுகிறது. உயரதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதரப் பணி என்ற பெயரில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த டிரைவர், கண்டக்டர்களுக்கு வழங்கப்படும் சலுகையை நிறுத்தி வைக்க வேண்டும். அவர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள்: இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட விவகாரம். பாதிக்கப்பட்ட நபர்கள் உரிய இடத்தில் மனு செய்து நிவாரணம் தேடலாம்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: 2019 ல் கூடுதலாக 208 டிரைவர், கண்டக்டர்கள் இருந்தனர்.தற்போது கூடுதலாக எத்தனை பேர் உள்ளனர் என தெரியவில்லை. அவர்களை நிர்வாகம் தொடர்பான எந்த பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது என 2018 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கூடுதலாக இருந்தாலும் அடுத்த 'ஷிப்ட்' பணியில் ஈடுபடுத்த வேண்டும். தற்போதும் நிலைமை மாறவில்லை. ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர், கண்டக்டர்கள் வேலை செய்வதில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள்: தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர் ஜூன் 9 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.