உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எதற்கும் இழப்பீடு கோரும் பொதுவான போக்கை அனுமதிக்க முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

எதற்கும் இழப்பீடு கோரும் பொதுவான போக்கை அனுமதிக்க முடியாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தற்போது எதற்கும் இழப்பீடு கோருவது பொதுவான போக்காக உள்ளது. ஏனெனில் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதில் தாராள மனப்பான்மையில் உள்ளன. இந்நடவடிக்கையில் நீதிமன்றம் ஒரு அங்கமாக இருக்க முடியாது. இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏற்பட்ட டிரைவர் காலி பணியிடத்திற்கு அழகுமலை என்பவர் விண்ணப்பித்தார். ராமு என்பவர் நியமிக்கப்பட்டார். அழகுமலையின் மனு நிராகரிக்கப்பட்டது. இனசுழற்சி முறை பின்பற்றவில்லை; நியமன குழு அமைக்கவில்லை என்பதால் 2015 ஜன.20ல் ராமுவின் நியமனத்தை கலெக்டர் ரத்து செய்தார். இதை எதிர்த்து ராமு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். டிரைவர் பணிக்கு விண்ணப்பித்த தனது மனுவை பரிசீலிக்காததை எதிர்த்து அழகுமலையும் மனு செய்தார். இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி, 'ஒருவரின் காலி பணியிடத்தில் அழகுமலை நியமிக்கப்படுவார். ஒருவரை இடமாற்றம் செய்ததால் ஏற்பட்ட காலிப்பணியிடத்தில் ராமுவை நியமிக்க வேண்டும்' என கலெக்டருக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து அரசு தரப்பு மற்றும் ராமு, அழகுமலை தரப்பில் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.இரு நீதிபதிகள் அமர்வு, 'அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகிறது. ராமுவை ஜீப் டிரைவராக நியமித்தது சட்டவிரோதம்; இட ஒதுக்கீடு விதிகளுக்கு முரணானது. ராமுவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டது. ராமு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அது உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது. நிலுவையில் உள்ளது.அழகுமலை,'டிரைவர் நியமனத்தில் குறிப்பிட்ட சமூக பிரிவிற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. எனது மனுவை பரிசீலிக்கவில்லை. எனக்கு தகுதிகள் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளனர். டிரைவராக நியமிக்கப்படாதால் மன உளைச்சல் ஏற்பட்டது. எனக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: எத்தகைய சூழ்நிலையில், இழப்பீடு கோரி மனுதாரர் அரசுக்கு மனு அனுப்பினார் என்பது துரதிர்ஷ்டவசமானது. மனுதாரர் மேல்முறையீடு செய்யவில்லை. அவரது சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இவ்விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.தற்போது எதற்கும் இழப்பீடு கோருவது பொதுவான போக்காக உள்ளது. ஏனெனில் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்குவதில் தாராள மனப்பான்மையில் உள்ளன. அதுவும் அரசின் கவனக்குறைவால் அல்ல. இந்நடவடிக்கையில் இந்நீதிமன்றம் ஒரு அங்கமாக இருக்க முடியாது. தகுதி அடிப்படையில் இம்மனு ஏற்புடையதல்ல; தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை