விரிவாக்கப் பணியில் அகற்றிய மரங்களை நடுவது எப்போது வனத்துறை மீது நெடுஞ்சாலைக்கு கோபம்
மதுரை: மதுரையில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை நடுவது தாமதமாவதால் வனத்துறை மீது நெடுஞ்சாலைத் துறை கோபத்தில் உள்ளது.மதுரை தெற்குவாசல் முதல் ரிங்ரோடு வரையான ரோடு 4 வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அவனியாபுரம் பைபாஸ் முதல் பெருங்குடி வரை முதற்கட்டமாக அமைக்கப்பட்டது. தொடர்ந்து பெருங்குடியில் இருந்து ரிங்ரோடு மண்டேலா நகர் வரை ஒரு கி.மீ., தொலைவுக்கு 10 மாதங்களுக்கு முன் ரோடு விரிவுபடுத்தப்பட்டது.இப்பணிக்காக நெடுஞ்சாலைத் துறையின் ரோட்டில் இருந்த வனத்துறையின் 60 மரங்கள் அகற்றப்பட்டன. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு மரத்திற்கு 10 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என கோர்ட் உத்தரவுள்ளது. எனவே 600 மரக்கன்றுகளை நட வேண்டும். இதற்காக நெடுஞ்சாலைத்துறை ரூ.30 லட்சம் வரை வனத்துறைக்கு வழங்கிவிட்டது. பத்து மாதம் கடந்தும் இதுவரை நடவில்லை. வனச்சரக அலுவலர் சிக்கந்தர் பாஷாவிடம் கேட்டபோது, ''மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதே ரோட்டில் நடுவதற்கு போதிய இடமில்லை. எனவே நெடுஞ்சாலைத் துறை கூறும் இடத்தில் மழைக்காலத்தில் நடப்படும். வனமரங்களான புங்கன், வேம்பு, புளி, பாதாம் போன்றவை நடப்படும்'' என்றார்.