யாகசாலை தொடர்பாக போஸ்டர் ஹிந்து அமைப்புகள் கண்டனம்
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் யாகசாலை பூஜை குறித்து, நாம் தமிழர் கட்சி ஒட்டிய போஸ்டருக்கு, ஹிந்துமக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது:யாகசாலை பூஜையின்போது, சேலம் சத்தியபாமா என்பவர், கும்பலுடன் அத்துமீறி நுழைந்து, தமிழில்தான் வேள்வி நடத்த வேண்டும் என்றார். பட்டர்கள் ராஜா, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், ஒருமையில் பேசி யாகசாலை பூஜையை தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. பட்டர் ராஜா, அடியாட்களை கொண்டு சத்தியபாமாவை தாக்குதல் நடத்தியதாக பொய்யான செய்தியை பரப்பி, போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழ் மீட்சிப் பாசறையின் செயல் கண்டனத்திற்குரியது.இவ்வாறு அவர் கூறினார்.