தி.மு.க., ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் இல்லை: செல்லுார் ராஜூ
மதுரை: ''தி.மு.க., ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டசபையில் பேசுகிறேன்'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவிற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளர்கள். முதல்வர் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதோடு விவகாரத்தை முடிக்க தி.மு.க., அரசு திட்டமிட்டது. ஆனால், அ.தி.மு.க.,வின் அழுத்தம் காரணமாக மேயர் இந்திராணி ராஜினாமா செய்துள்ளார். சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்ட கவுன்சிலர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். வாரிசு அரசியல், ஊழலை ஒழிப்பதற்காக எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களாகவே பழனிசாமி பிரசாரத்தில் பங்கேற்கிறார்கள். தி.மு.க., ஆட்சியில் மதுரைக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தவில்லை. மதுரையின் இரு அமைச்சர்களும் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க., ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டசபையில் பேசுகிறேன். அ.தி.மு.க., கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரக்கூடிய சூழல் உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் இறுதி செய்யப்படும். இவ்வாறு கூறினார்.