விழிப்புணர்வுடன் இருந்தால் ஆபத்தை தவிர்க்கலாம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேச்சு
மதுரை: 'விழிப்புணர்வுடன் செயல்பட்டால் அனைத்துவித ஆபத்துகளையும் தவிர்க்கலாம்' என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் பேசினார்.மதுரை லேடி டோக் கல்லுாரியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த 16 நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்க விழா நடந்தது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ வரவேற்றார். நீதிபதி சிவஞானம் பேசியதாவது:விழிப்புணர்வுடன் இருப்பதுதான் சமுதாயத்தில் பெண்களுக்குஏற்படும் அனைத்துவித ஆபத்தில் இருந்தும் அவர்களை காக்கும். வாழ்க்கையில் பயணிக்கஉங்களுக்கான தனித்துவமான பாதையில் செல்ல வேண்டும். சமூகத்தில் உள்ள அனைத்துவித பிரச்னைகளுக்கும் திருக்குறளில் பதில் உள்ளது. ஒருவருடைய செயலும், ஒழுக்கமும் தான் அவருக்கு துணையாக இருக்கும். கோபம் எனும் ஆயுதம் மட்டுமே அதைக் கொள்பவரை கொல்லும் திறன் படைத்தது. எனவே அதை கைவிட வேண்டும். வாழ்க்கை எளிமையானது, இன்பமானது. வாழ்வதற்கு படிப்புத் தேவையில்லை. வாழ்வியல் நெறிமுறைகளை தெரிந்து கொண்டாலே போதும். அவற்றை முன்பு நாடகங்கள், தெருக்கூத்துகள் சொல்லிக் கொடுத்தன. பிறர் கூறும் அறிவுரைகளை குருட்டுத்தனமாக நம்ப கூடாது. பிரச்னைக்கான தீர்வுகள் சில நேரங்களில் அதற்குள்ளேயே இருக்கும். குறிப்பிட்ட பிரச்னையின் மீது அதிக கவனம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆசைப்படுவதன் விளைவுகளை சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.மாநில மனித உரிமை கமிஷன் தலைவர் மணிக்குமார், போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, வழக்கறிஞர் சாமிதுரை, கல்லுாரி துணை முதல்வர் நிம்மா எலிசபத், சிற்றாலய பொறுப்பாளர் ஜெஸ்ஸி ரஞ்சிதா ஜெபசெல்வி, பெண்களுக்கான ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் ஆன் நிர்மலா கர் ஆகியோர் பங்கேற்றனர். பொருளாளர் வனிதா மலர்விழி நன்றி கூறினார்.