மேலும் செய்திகள்
சர்வதேச திரைப்பட விழா கோவாவில் 20ல் துவக்கம்
10-Nov-2024
மதுரை: மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர் டில்லியில் சந்தித்த போது பிற நாடுகளுடனான விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்க்க வலியுறுத்தினர்.மத்திய அமைச்சரிடம் பேசியது குறித்து நிர்வாகிகள் ஜெகதீசன், ஸ்ரீதர் மதுரையில் கூறியதாவது:மதுரை விமான நிலையத்திலிருந்து மூன்று சர்வதேச விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் 2023 -- 24ம் ஆண்டில் 12லட்சத்து 85ஆயிரத்து 926 பயணிகளைக் கையாண்ட பெருமை பெற்றுள்ளது. இதில் 10லட்சத்து 58ஆயிரத்து 937 பேர் உள்நாட்டு பயணிகள், 2 லட்சத்து 27ஆயிரத்து 39 பேர் சர்வதேச பயணிகள். கோவை விமான நிலையம் பிற நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருந்தாலும் சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் மதுரையை விட குறைவு. சேவை இல்லாததற்கு அனுமதியா
ஒரு வெளிநாட்டு போக்குவரத்து சேவை கூட இல்லாத விஜயவாடா, திருப்பதி மற்றும் ஷீரடி விமான நிலையங்கள் மத்திய அரசால் சர்வதேச விமான நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிக சர்வதேச பயணிகள் போக்குவரத்து கொண்ட மதுரை விமான நிலையம் இன்னமும் சுங்க விமான நிலையமாக மட்டுமே உள்ளது.மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் போது கூடுதலாக பல உள்கட்டமைப்புகளை பெற முடியும். சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் ஏற்படும் காலதாமதம் விமான நிலையத்தின் வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. தென் தமிழகத்தின் தொழில், வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.மலேசியா, குவைத், ஐக்கிய அரபு மற்றும் இதர வளைகுடா நாடுகளுடனான ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்பட வேண்டும். மதுரைக்கு நேரடியாக விமான சேவையை துவங்க பன்னாட்டு விமான சேவை நிறுவனங்கள் தயாராக உள்ளன. அச்சேவையை துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இதை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம்.அப்போது ''மதுரை உள்ளிட்ட மூன்று விமான நிலையங்களை விரைவில் சர்வதேச விமான நிலையங்களாக அறிவிப்பதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படும்'' என்று உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
10-Nov-2024