மதுரை மாவட்டத்தில் தீராத நெல் கொள்முதல் பஞ்சாயத்து
மதுரை: மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் மையங்களை (டி.பி.சி.) செப். 30ல் திறக்க கலெக்டர் பிரவீன் குமார் உத்தரவிட்டும், நுகர்பொருள் வாணிப கழகத்தில் (டி.என்.சி.எஸ்.சி.,) இருந்து ஒரு மையம் கூட திறக்கவில்லை. தொடர் மழை பெய்வதால் நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். குறுவை நெல் சாகுபடிக்கான பகுதிகளை ஆய்வு செய்த வேளாண் துறை அதிகாரிகள் உத்தேச அறுவடை நாளை கணக்கிட்டு அந்தந்த பகுதிகளில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என இரு மாதங்களுக்கு முன்பே கலெக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். எங்கெங்கு மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகளை வரவழைத்து ஆகஸ்ட் இறுதியில் கூட்டம் நடத்தி 41 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு போதுமான ஆட்கள் தேர்வு செய்யப்பட்டதாக டி.என்.சி.எஸ்.சி., மண்டல அலுவலர் சரவணன் தெரிவித்த நிலையில் மையங்களை செப். 30 ல் திறக்க கலெக்டர் உத்தரவிட்டார். 17 நாட்களாகியும் மதுரையில் ஒரு மையம் கூட திறக்கவில்லை. ஏற்கனவே குலமங்கலம், பூதகுடி பகுதி விவசாயிகள் மழைக்கு பயந்து நெல்லை அறுத்து வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். மீதி விவசாயிகள் காத்திருக்கின்றனர். மதுரை வாடிப்பட்டி கட்டக்குளம், மாங்குளம், குருத்துார் பகுதி விவசாயிகளில் பாதி பேர் ஒரு வாரத்திற்கு முன்பே நெல்லை அறுவடை செய்து, மையத்தின் முன்பாக கொட்டி வைத்து தார்ப்பாயால் மூடி எடையிடுவதற்காக காத்திருக்கின்றனர். மதுரையில் பரவலாக தொடர் மழை பெய்வதால் நெல் மணிகள் முளைத்து விடும் என டி.என்.சி.எஸ்.சி., அதிகாரியை தொடர்பு கொண்டால் எடையிடுவதற்கு ஆட்கள் இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: முகிலன், கட்டக்குளம்: செப். 30 ல் மையம் திறக்க கலெக்டர் அனுமதி வழங்கியிருந்ததால், 4 ஏக்கரில் உள்ள நெல்லை அக். 5ம் தேதியே அறுவடை செய்து விட்டேன். எடையிடுவதற்காக மையத்தின் முன்புறம் கொட்டி வைத்து காவல் காக்கிறேன். மழையும் பெய்வதால் தார்ப்பாயால் மூடி வைத்துள்ளேன். பரமசாமி, கட்டக்குளம்: சன்னரகத்தில் 10 ஏக்கரில் பயிரிட்டு 500 மூடை அளவுக்கு நெல்லை குவித்துள்ளேன். நான் உட்பட 60 விவசாயிகள் நெல்லை குவித்து தார்ப்பாயால் மூடியுள்ளோம். களம் இல்லாத மண் தரையில் தார்ப்பாய் விரித்து நெல்லை குவித்துள்ளோம். இந்த குவியல்களை எடையிட்டு லாரியில் ஏற்றினால் தான் மற்ற விவசாயிகள் அறுவடை செய்ய முடியும். மழை பெய்வதால் வயலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நெற்கதிர்கள் சாய்ந்து விட்டால் அவை அறுப்பதற்கு முன்பாகவே முளைத்து விடும். இந்த நஷ்டத்தை யார் ஈடுகட்டுவது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் (நேற்று) மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கொள்முதல் மையம் திறக்கப் படவில்லை.