கோயில்களுக்கு சர்க்குலர் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மூன்று மாதங்களுக்கு மதுரை கோயில்களுக்கு வட்டப் பேருந்துகள் (சர்க்குலர் பஸ்கள்) இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாதாரண நாட்களிலேயே தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதிலும் கார்த்திகை பிறந்துவிட்டதால் சபரிமலைக்கு மாலை அணிந்த வெளியூர் பக்தர்கள் அணி அணியாக வந்து செல்கின்றனர். மார்கழி, தை மாதம் வரை இவர்களும், அவர்களோடு முருகனுக்கு மாலை அணியும் பக்தர்களும் திருப்பரங்குன்றம் வந்து செல்வர். இதனால் இந்த 3 மாதங்களும் திருப்பரங்குன்றம், மதுரையில் எங்கு திரும்பினாலும் பக்தர்களின் கூட்டம் இருக்கும்.இப்பக்தர்களில் பெரும்பாலானோர் குன்றத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் உட்பட சுற்றுவட்டார கோயில்களுக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக அவர்கள் பெரியார் பஸ்ஸ்டாண்ட், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் என வேறு வேறு திசைகளில் உள்ள பஸ்ஸ்டாண்டுகளுக்கு சென்று அலைந்து திரிய வேண்டியுள்ளது.இவர்களின் வசதிக்காக வரும் 3 மாதங்களுக்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை சுற்றுவட்டார கோயில்களை இணைத்து சிறப்பு வட்ட பேருந்துகள் (சர்க்குலர்) இயக்கலாம். இதனால் பக்தர்கள் அனைத்து தலங்களிலும் எளிதாக தரிசனம் செய்ய வழிபிறக்கும் என எதிர்பார்க்கின்றனர்.