தென்னை மரங்களுக்கு இன்சூரன்ஸ்
மதுரை: தென்னை மரங்களுக்கு அக். 31க்குள் இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமென தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 17 எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடியாகிறது. இயற்கை மற்றும் பிற ஆபத்துகளுக்கு எதிராக தென்னை மரத்திற்கு வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பூச்சி, நோய் தாக்குதல் இல்லாத நன்கு வளர்ந்த தென்னை மரங்களுக்கு ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத்தொகை ரூ.8000. காப்பீட்டு கட்டணம் ஏக்கருக்கு ரூ.534 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்திய வானிலை மையத்தால் அந்தந்த தாலுகாவிற்குட்பட்ட மழை அளவின் அடிப்படையில் அதிகபட்ச, குறைந்த பட்ச மழை திட்ட விதிகளின் படி இழப்பீடு கணக்கிடப்படும். அக். 31 கடைசிநாள் என்பதால் விவசாயிகள் ஆதார், வங்கி பாஸ்புக், நாமினி ஆதார், சிட்டா, அடங்கல், சுயஉறுதிமொழி சான்று நகலுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என்றார்.