கள்ளழகர் கோயில் தோசை ரூ.44.47 லட்சத்திற்கு விற்பனை
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பிரசாதங்கள் ஆடி மாதத்தில் மட்டும் ரூ. 77 லட்சத்திற்கு மேல் விற்பனையாகியுள்ளன. இக்கோயிலில் பிரசாதமாக தோசை வழங்கப்படுகிறது. அருகிலுள்ள கிராமங்களில் விளையும் சம்பா உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் கோயிலுக்கு தானமாக வழங்குவர். அதனுடன் மிளகு, சீரகம், உளுந்து, சுக்கு, பெருங்காயம், நெய் உள்ளிட்டவை சேர்த்து தோசை தயாரிக்கப்படுகிறது. ஒரு தோசையின் விலை ரூ.40. வாமன அவதார புராணத்தில் விண்ணை ஒரு காலால் அளந்த பெருமாளின் பாதத்திற்கு, பிரம்மா திருமஞ்சனம் செய்தார். அந்த நீர் பெருமாள் காலில் அணிந்திருந்த சிலம்பில் பட்டு சிலம்பாறாக ஓடியது. கங்கைக்கு நிகராக விளங்கும் அதுவே அழகர்மலை மீது சுரக்கும் நுாபுர கங்கை தீர்த்தம். மருத்துவ குணம் கொண்ட இதனை கொண்டு தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தோசை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 12 மாதங்களும் திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை திருவிழாவும், ஆடிப் பவுர்ணமியை ஒட்டிய பிரம்மோற்ஸவமும் முக்கியமானவை. இந்தாண்டு ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசாத விற்பனை ஜோராக நடந்தது. ஆடி பிரம்மோற்ஸவ விழாவான 10 நாட்களில் ரூ. 19.82 லட்சம் மதிப்புள்ள 49 ஆயிரத்து 557 தோசைகள் விற்பனையாகின. ஆடி மாதம் முழுதும் ரூ.44.47 லட்சம் மதிப்புள்ள ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 189 தோசைகள் விற்பனையாகின. லட்டு, முறுக்கு, அதிரசம், அப்பம், புளியோதரை என மொத்தம் ரூ.77 லட்சத்து 14 ஆயிரத்து 350க்கு பிரசாதங்கள் விற்பனையானதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.