உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுகாதாரக்கேடாய் மேலூர் சிவன் கோயில் சுற்றுப்புறம் : கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை

சுகாதாரக்கேடாய் மேலூர் சிவன் கோயில் சுற்றுப்புறம் : கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை

மேலூர் : மேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயிலின் சுற்றுப்புறம் சுகாதாரக்கேடாய் உள்ளது, இதை நகராட்சியும் தூய்மைப்படுத்தவில்லை, அறநிலையத்துறையும் கண்டுகொள்ளவில்லை. மேலூர் நகர் மற்றும் கிராம புற மக்களின் திருமணங்கள் மேலூரில் உள்ள சிவன் கோயிலில் நடைபெறும். தனியாக திருமணத்திற்கு மண்டபம் பிடித்திருப்பவர்கள் கூட, தாலி கட்டும் வைபவத்தை இக் கோயிலில் நடத்திவிட்டு மற்ற நிகழ்ச்சிக்களுக்கு மண்டபம் செல்வர். ஆண்டு தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும் இக்கோயிலில், முகூர்த்த நேரங்களில் ஒரே நாளில் 20க்கு மேற்பட்ட திருமணங்கள் கூட நடைபெறும்.

இக்கோயிலின் சுற்றுப்புறம் மிகவும் சுகாதார கேடாய் உள்ளது. கோயிலின் சுற்றுச் சுவர் முழுவதும் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் காம்பவுண்ட் சுவரை ஒட்டி குப்பைகள் கொட்டப்படுவதும், சிறுநீர் கழிப்பதுமாக உள்ளனர். இங்கு தேங்கி உள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. சுற்றுச் சுவரை ஒட்டி நகராட்சியின் குப்பை வண்டிகள் ஓய்வுக்காக நிறுத்தப்படுகிறது. அத்துடன் கோயில் சுவரை ஒட்டியுள்ள தெருவிளக்கின் சுவிட்ச் பாக்ஸ் தரையை தொட்டபடி உள்ளது. இவ்விடத்தில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எதிர்பாராத விதமாக வாகனங்கள் இதில் மோதிவிடவும், சிறுவர்கள் யாரேனும் தொட்டுவிடக் கூடிய ஆபத்தும் உள்ளது. அறநிலையத் துறைக்கு வருமானம் வரும் இக் கோயிலின் பராமரிப்பு குறித்து அவர்கள் அக்கறை காட்டாமல் இருப்பது ஏனோ ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ