உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாய் மதகை சீரமைக்காமல் சேதமானால் அதிகாரிகளே பொறுப்பு; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

கண்மாய் மதகை சீரமைக்காமல் சேதமானால் அதிகாரிகளே பொறுப்பு; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை : 'விருதுநகர் மாவட்டம் சாத்துார் பெரியகோவில்பட்டி கண்மாய் மதகை சீரமைக்காமல் சரியாக பராமரிக்காவிடில் உடமைகள், உயிர்சேதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.பெரியகோவில்பட்டி முத்துக்கிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: பெரியகோவில்பட்டி கண்மாய் சில கிராமங்களின் விவசாயம், பிற தேவைகளுக்கு நீராதாரமாக உள்ளது. கண்மாயில் தண்ணீர் திறந்து விட 5 மதகுகள் (மடைகள்) உள்ளன. இது நீர்வளத்துறை வைப்பாறு நீர்வள கோட்ட செயற்பொறியாளர் பராமரிப்பில் உள்ளது. 2வது மதகு சேதமடைந்துள்ளது. சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு: 2020-21ஆண்டில் குடிமராமத்து பணிக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு கண்மாய் சீரமைக்கப்பட்டது. சில மாதங்களில் 2வது மதகு, கதவு சேதமடைந்துள்ளது. சாகுபடி பாதித்துள்ளது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.டிச.,30 அல்லது அதற்கு முன் சீரமைக்கப்படும் என நீர்வளத்துறை முதன்மைச் செயலர், விருதுநகர் கலெக்டர், செயற்பொறியாளர், சாத்துார் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.2023 டிசம்பர் முதல் மனுதாரர் புகார் அளித்துள்ளார். பருவமழையை கருத்தில் கொண்டு மதகை சீரமைக்காமல் அல்லது கண்மாய் அல்லது மடைகளை சரியாக பராமரிக்காதபட்சத்தில் உடமைகள், உயிர்சேதம் ஏற்பட்டால் மேற்கண்ட 5 அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.சீரமைப்பதில் பொதுப்பணம் வீணாகாமல், மக்களுக்கு இழப்பு ஏற்படாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ