உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ரோடு மறியல்பொதுமக்கள் அவதி

அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் ரோடு மறியல்பொதுமக்கள் அவதி

மதுரை : மதுரையில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை திடீர் ரோடு மறியல் செய்ததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.அமெரிக்கன் கல்லூரி ஜூன் 16ல் திறக்கப்பட்டது. முதலாண்டு வகுப்புகள் ஜூன் 30ல் துவங்கியது. பெயிலான மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு( ரிபீட் எக்ஸாம்) தேர்வு தற்போது நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுதும் மாணவர்கள் பர்சார் அலுவலகத்தில் தங்களுக்கு கட்டண பாக்கி நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்த பின், செலான் பெற்று அதில் உள்ள கட்டணத்தை இந்தியன் வங்கியில் அந்த ரசீதை கொடுத்து ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும், என்பது நடைமுறை.தேர்வுக்கு விண்ணப்பித்த 450 மாணவர்களில் 240 பேருக்கு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நேற்று காலை 9 மணிக்கு கல்லூரியின் முன் ரோடு மறியிலில் ஈடுபட்டனர். இதனால் தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், '' மாணவர்கள் வங்கியில் பணம் கட்டிய பின் அங்கு வழங்கப்படும் ரசீதை, போட்டி முதல்வர் என கூறிக்கொண்டு கல்லூரியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு தரப்பினர் இதை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. மாணவர்களின் நலன் பாதிக்கப்படக்கூடாது, என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதனால் வங்கியில் எந்த மாணவர்கள் எல்லாம் பணம் செலுத்தியுள்ளார்கள் என தெரிந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்'', என்றனர்.மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தல்லாகுளம் போலீசார் எச்சரித்தனர். 23 மாணவர்களிடம் போலீசார் விசாரணை செய்து விடுவித்தனர். இந்த 23 மாணவர்களும் தேர்வு கட்டணம் கட்ட அவகாசம் கேட்டதை தொடர்ந்து மதுரை காமராஜ் பல்கலை டீன் டேவிட் அமிர்தராஜ் வேண்டுகோளின்படி அந்த மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிப்பட்டதாக பர்சார் தவமணி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ