உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிறந்த குழந்தைக்கு சுவாசக் கோளாறு

பிறந்த குழந்தைக்கு சுவாசக் கோளாறு

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்து எட்டு நாட்கள் ஆன குழந்தையின் சுவாச பிரச்னையை 'எண்டாஸ்கோப்பி' ஆப்பரேஷன் மூலம் டாக்டர்கள் சரி செய்தனர். குரல் வளம் பாதிக்கப்பட்டவருக்கும் ஆப்பரேஷன் நடந்தது. ஜெய்ஹிந்துபுரம் தச்சு தொழிலாளி பாலசுப்பிரமணி, 25. மனைவி வனிதா, 22. இவர்களுக்கு எட்டு நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. குழந்தையின் மூக்கின் பின்புற துவாரத்தில் இரண்டு பக்கமும் அடைப்பு ஏற்பட்டது தெரிந்தது. 'எண்டாஸ்கோப்பி' ஆப்பரேஷன் செய்ய இ.என்.டி., பிரிவின் தலைவர் கண்ணப்பன் மற்றும் டாக்டர்கள் சரவணமுத்து, ராஜசேகரன், குழந்தைகள் பிரிவு டாக்டர்கள் மாதேவன், வெங்கடேஸ்வரன், சம்பத், ரகுநந்தன், மயக்கவியல் நிபுணர்கள் திருநாவுக்கரசு, கணேஷ் பிரபு, பாப்பையா முடிவு செய்தனர்.மூக்கின் பின்பக்க துவாரம் எலும்பால் மூடியதை, 'எண்டாஸ்கோப்பி' மூலம் அகற்றினர். புதிய பின் பக்க துவாரங்களை, உட்புறம் ஏற்படுத்தினர். கண்காணிப்பாளர் ராமானுஜம், ஆர்.எம்.ஓ.,திருவாய்மொழி பெருமாள், கண்ணபிரான் கூறியதாவது: வெளிப்புற ஆப்பரேஷன் இன்றி, மூக்கின் முன்துவாரம் வழியாக 'எண்டாஸ்கோப்பி' மூலம் ஆப்பரேஷன் நடந்தது. குழந்தை மூச்சுத் திணறல் இன்றி, நலமாக உள்ளது. சில குழந்தைகளுக்கு மூக்கின் ஒரு பக்கம் அடைபட்டிருக்கும். பிறந்த ஓராண்டுக்கு பின் இது தெரியும். எட்டு நாள் குழந்தைக்கு, இங்கு ஆப்பரேஷன் செய்தது முதல் முறை, என்றனர்.குரல் பாதிப்புக்கு தீர்வு:ஆஸ்டின்பட்டியை சேர்ந்தவர் அந்தோணி, 30. இவர் பேச முடியாமல் குரல் வளம் பாதித்து, மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. குரல் நாணில் பெரிய கட்டி ( பேப்பிலோமா) இருந்தது தெரிந்தது. அது சுவாச குழாயை அடைத்திருந்தது. குரல் நாணில் மீதியிருந்த மிகச்சிறிய இடைவெளியில் டாக்டர்கள் மயக்கமருந்து செலுத்தினர். 'எண்டாஸ்கோப்பி' மூலம் கட்டியை அகற்றினர். தற்போது அந்தோணி மூச்சுதிணறல் இன்றி பேசுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை